காணாமல் ஆக்கப்படுவதற்குக் காரணமாக இருந்த ஈ.பி.டி.பி கட்சியின் உறுப்பினரை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவதனி நேற்றுத் தெரிவித்தார்.
சங்கத்தினர் போராட்டம் ஆரம்பித்து நேற்று 673 நாள்களாகியுள்ளன. அவர்கள் அங்கு நேற்றுச் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.
அதில் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டிக் கருத்துத் தெரிவித்தார்.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நேற்றுமுன்தினம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஜனவரி 9ஆம் திகதி பெரும் போராட்டம் நடத்தவுள்ளோம் என்று கூறியிருந்த னர். இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி ஜெயவதனி நேற்றுத் தெரிவித்ததாவது:
‘‘எமது பிள்ளைகள் காணாமற் போவதற்குக் காரணமாக இருந்த கட்சி ஈ.பி.டி.பி. அதன் உறுப்பினராக இணைந்து கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கிய வடக்கு – கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை இணைத்துச் செயற்படும் தலைவியை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
தலைவி என்று சொல்லிக்கொள்பவர் இரண்டொரு போராட்டங்களின்போது கலந்துகொண்டிருந்தவர். அவர் சார்பானவர்களின் நோக்கங்கள் மற்றும் இரகசியத்தகவல்கள் வெளியே வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் அவரைச் சிறிது ஒதுக்கி வைத்திருந்தோம். அத்தகையவர்களை முன்னிறுத்தி எதனையும் மேற்கொள்ளவில்லை. சில பல பிரச்சினை களை ஏற்படுத்தி எம்மிடமிருந்து தானாகவே விலத்திக்கொண்டார்.
அவருடைய காணாமல் போன பிள்ளையின் ஒளிப்படம் எமது பந்தலில் உள்ள பதாகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது பிள்ளைக்கு அவரே துரோகம் இளைத்துள்ளார்.
இவர் கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி கட்சியில் உள்ளூராட்சித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தார். ஒரு அரசியல் கட்சி சார்ந்து செயற்பட்டுள்ளார். தற்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி என்று சொல்லிக்கொள்கின்றார். இவருக்கு தலைவிப் பதவி யார் வழங்கினர் என்பது எமக்குத் தெரியாது. எமக்கு ஒரு தீர்வு கிடைக்கின்ற நேரத்தில் இவரின் செயற்பாட்டால் எமது போராட்டத்துக்குத் தீர்வு கிடைக்காமலும் போகலாம்.
எமது பிள்ளைகள், உறவினர்கள் காணாமல்போவதற்கு பல மாற்று இயக்கங்கள் ஆதாரமாகவே இருந்தன. தற்போது இவரும் அந்தக் கட்சியுடன் இணைந்துள்ளார்’’ – – என்றார்.
இதேவேளை நேற்றுமுன்தினம் நடந்த செய்தியாளர் சந்திப்புக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சென்றிருந்தார். “சிவசக்தி ஆனந்தன் கடந்த வருடம் எங்களிடம் வந்து, நீங்கள் இவ்வாறு இருந்து வேலையில்லை. ஏ –9 வீதியை வழிமறித்துப் போராட்டம் மேற்கொள்வோம் என்றார். நீங்கள் சென்று மறியுங்கள் நாங்கள் உதவி செய்கின்றோம்.
நீங்கள் 500 அல்லது ஆயிரம் பேரை அழைத்துச் சென்று நொச்சிமோட்டைப் பாலத்திலிருந்து மறியுங்கள். ஒரு மணிநேரத்தின் பின்னர் எமது தாய்மாரையும் அழைத்துக்கொண்டு நாங்கள் அங்கு வருகின்றோம். அதற்கு முதல் அங்கு செல்ல மாட்டேன் என்று கூறியிருந்தேன். நாங்கள் அவரிடம் பல உதவிகள் பெற்றிருக்கலாம். அது அவர் செய்யவேண்டிய கடமை. அவரை நாங்கள் ஒதுக்கிவைக்கவில்லை’’ – என்றார்.

