நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 102 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசியது. மும்பை தொடக்க வீரர்களாக சூரியகுமார், லூயிஸ் களமிறங்கினர்.
இருவரும் முதல் விக்கெட்டுக்கு 46 ரன் சேர்த்தனர்.லூயிஸ் 18 ரன், சூரியகுமார் 36 ரன் (32 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து சாவ்லா சுழலில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரோகித் – இஷான் கிஷன் ஜோடி அதிரடியில் இறங்க, மும்பை ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. குறிப்பாக, இஷான் கிஷன் பவுண்டரியும் சிக்சருமாக விளாசித் தள்ளி 17 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். குல்தீப் யாதவ் வீசிய 14வது ஓவரில் அவர் தொடர்ச்சியாக 4 சிக்சர்களை தூக்கி ரசிகர்களை மகிழ்வித்தார்.
கொல்கத்தா பந்துவீச்சை சிதறடித்த இஷான் 62 ரன் (21 பந்து. 5 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி சுனில் நரைன் சுழலில் உத்தப்பாவிடம் பிடிபட்டார். ஹர்திக் 19 ரன், ரோகித் 36 ரன் எடுத்து (31 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழந்தனர். சாவ்லா விச்சிய கடைசி ஓவரை பென் கட்டிங் துவம்சம் செய்தார். அவர் 9 பந்தில் 24 ரன் விளாசி வெளியேறினார். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன் குவித்தது. குருணல் 8, டுமினி 0 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கொல்கத்தா பந்துவீச்சில் சாவ்லா 3, நரைன், கரன், பிரசித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 211 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நைட் ரைடர்ஸ் களமிறங்கியது. அந்த அணி 18.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன் எடுத்து 102 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. லியன், ராணா ஆகியோர் அதிகபட்சமாக 21 ரன் எடுத்தனர்.
மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். மும்பை அணி வீரர் இஷான் கிஷன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.