ஜாம்பி வகை படங்கள் ஹாலிவுட்டில் மிகவும் பிரபலம். ஒரு வித வைரசால் பாதிக்கப்படும் மனிதர்கள், மற்ற மனிதர்களை கடித்து ஜாம்பியாக மாற்றுவார்கள். படம் பார்க்க அறுவெறுப்பாக இருந்தாலும் இதற்கும் தனி ரசிகர்கள் உண்டு. தமிழில் ஜெயம்ரவி நடித்த மிருதன் இந்த வகை படம்தான்.
இப்போது முதன் முறையாக முழுநீள ஜாம்பி படம் தயாராகிறது. படத்தின் பெயரும் ஜாம்பி தான். இதில் யோகிபாபு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அவருடன் யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், கார்த்தி உள்பட பலர் நடிக்கிறார்கள். படத்திற்கு பிரேம்ஜி இசை அமைக்கிறார். புவன் நல்லான் இயக்குகிறார்.
இது சென்னையில் இருந்து புதுச்சேரி வரை நடக்கிற கதை. இந்த வழியில் உள்ள ரிசார்ட்சுகளில் ஜாம்பிகள் உருவாகி பரவுவதாக கதை. அதனால் கிழக்கு கடற்சரை சாலையில் உள்ள ரிசார்ட்சுகளில் படமாகி வருகிறது. இதன் இறுதிகட்ட படப்பிடிப்புகள் 15 நாட்கள் திட்டமிடப்பட்டு நடந்து வருகிறது. 200 இளம் பெண்கள் 300 ஆண்கள் ஜாம்பி மேக்அப்போட்டு நடித்த பிரமாண்ட கிளைமாக்ஸ் காட்சி ஹீலியம் விளக்கொளியல் படமாக்கப்பட்டுள்ளது. படம் ஏப்ரல் மாதம் வெளிவருகிறது.