இந்தியாவில் எந்த மொழியில் படம் எடுத்தாலும் சரி… ஒரு பாடல் காட்சியையாவது வெளிநாட்டிற்கு சென்று எடுத்து வர வேண்டும் என்பது, இந்திய இயக்குநர்களின் சிந்தனையாக இருக்கிறது. ஆனால், ஆங்கிலப் படங்களை எடுப்பவர்கள், பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு படபிடிப்புக்கு வருவது மிக மிக குறைவு. இத்தனைக்கும், இந்தியாவில் இல்லாத எந்த விஷயமும் வெளி நாடுகளில் இல்லை.
இந்தக் குறையைப் போக்கும் விதமாக பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன், தான் எடுக்கும் டெனட் என்ற படத்தின் பெரும் பகுதியை இந்தியாவிலேயே படமாக்க திட்டமிட்டிருக்கிறார். அதற்காக தன்னுடைய சொந்த விமானமான கிரிஸ்டல் ஸ்கை என்ற போயிங் 777 விமானம் மூலம் கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவுக்கு வந்தவர், சென்னையில் வந்து சில நாட்கள் தங்கினார். பின், மும்பைக்குச் சென்று, அங்கு படபிடிப்பு நடத்துவதற்கான அடிப்படையான சில வேலைகளை முடித்துக் கொண்டு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு தன்னுடைய விமானம் மூலம் சென்றார்.
அவருடைய விமானத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய உள்ளன. தெலைக்காட்சி நேரலை, வைபை, மேற்கத்திய உணவு தயாரிப்புக் கூடம், திரைப்படங்கள் பார்க்கும் வசதி, பாடல்கள் கேட்கும் வசதி என பல வசதிகள் விமானத்தில் இருக்கின்றன. விமானத்திலேயே விமானியும் விமானப் பணியாளர்களும் தங்கிக் கொள்ளும் வசதியும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
விரைவில் இந்தியாவுக்கு படக் குழுவினருடன் வரும் கிறிஸ்டோபர் நோலன், படபிடிப்பை, இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் நடத்தி முடித்து விட்டு, அமெரிக்கா திரும்ப திட்டமிட்டிருக்கிறாராம்.