அரகலயவின் முன்னணி செயற்பாட்டாளர்கள் அரசாங்கம் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் அச்சுறுத்தல் மிரட்டல்களிற்குள்ளாகியுள்ளனர். அரகலய செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்படுவது அவர்களுடைய தொலைபேசிகள் இடைமறித்து கேட்கப்படுவது உட்பட கண்காணிப்பு நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.
சட்டத்தரணி நுவான்போபகே,அருட்தந்தை அமில ஜீவந்த பீரிஸ் ஐயுஎஸ்எவ் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே முன்னாள் ஏற்பாட்டாளர் லகிருவீரசேகர உட்பட பலர் அரசாங்கத்திடமிருந்து அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்.
பாதுகாப்பு படையினர் இந்த செயற்பாட்டாளர்களை பின்தொடர்கின்றனர் அவர்களின் தொலைபேசி உரையாடல்கள் இடைமறித்து ஒட்டுக்கேட்கப்படுகின்றன இவர்களிற்கு ஆதரவளிக்க முயல்பவர்களை பாதுகாப்பு படையினர் அச்சுறுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.
நேற்;று சுயாதீன ஊடகவியலாளரும் ஐயுஎஸ்எவ் செயற்பாட்டாளருமான வெரங்கபுஸ்பிக பொலிஸார் என கருதப்படும் ஆறுபேரால் கைதுசெய்யப்பட்டு நீல நிற ஜீப்பில் கொண்டு செல்லப்பட்டார்.
கொழும்பு கோட்டை புகையிரத பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு அவர் பேருந்தில் சென்றுகொண்டிருந்தவேளை ஜிசி 0342 என்ற இலக்கத்தகடுடைய வாகனத்தில் வந்த சீருடை அணியாதவர்கள் அவரை கைதுசெய்தனர் என கோட்டா கோ கம போராட்டக்குழுவை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னர் கோத்தபாய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்த தற்போது ரணில்விக்கிரமசிங்க பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் பொதுஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட செயற்பாட்டாளர்கள் தொடர்ந்தும் கைதுசெய்யப்படுவது குறித்து பல தொழிற்ச ங்கங்களின் உறுப்பினர்களும் சிவில் சமூக அமைப்புகளும் நேற்று மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இலங்கை பொலிஸாரிடம் விசாரணைகளை மேற்கொண்டவேளை புஸ்பிக்க கொழும்பு தென்பகுதி டிசிபிடியினால் கைதுசெய்யப்பட்டமை உறுதியாகியுள்ளது. மனித உரிமை ஆணைக்குழுவின் குழுவினர் டிசிபிடியிற்கு செல்லவுள்ளனர்.
எனினும் டிசிபிடி அமைந்துள்ள கிருலப்பனை பொலிஸ் நிலையத்தினை மோர்னிங் தொடர்புகொண்டவேளை தாங்கள் அவ்வாறான நபர் ஒருவரை தடுத்துவைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொலிஸ் ஊடக பேச்சாளரை தொடர்புகொண்டவேளை அவர் நேற்று மதியம் வரை இவ்வாறான கைது குறித்து தான் அறிந்திருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
அரகலயவின்முக்கிய செயற்பாட்டாளர் கிறிஸ்தவ மதகுரு அருட்தந்தை ஜீவந்தபீரிசை தேடிஇரத்தினபுரியில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்கு பொலிஸ் குழுவொன்று சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அருட்தந்தையை கண்டவுடன் கைதுசெய்வதற்கான உத்தரவு கிடைத்துள்ளதாக பொலிஸ் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் மோர்னிங் இரத்தினபுரி பொலிஸாரை தொடர்புகொண்டவேளை அவர்கள் இதனை நிராகரித்துள்ளனர்.
சமீபத்தைய பதற்றநிலைக்கு பின்னர் அனேகமான காலிமுகத்திடலின் ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவத்தினரின் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதுடன் தாங்கள் ஆர்ப்பாட்ட பகுதியை மீண்டும் உருவாக்குவதை தடுக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆர்ப்பாட்ட பகுதியை மீண்டும் உருவாக்கும் மீண்டும் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் இராணுவத்தினர் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்த தாக்குதலில் அனேகமான கூடாரங்கள் சேதமாகியுள்ளன ஆனால் கூடாரங்களிற்கு பொருட்களை எடுத்துச்செல்வதற்கு ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு அனுமதி வழங்கப்படவில்லை காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட பகுதியில் இராணுவத்தினர் அவர்களை அச்சுறுத்துகின்றனர் என ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் தெரிவித்தார்.