சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவைத் தொடர்பு கொள்ள முடியாதிருப்பதாக அவரது சகோதரர் கவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அனோஜனின் சகோதரர் ஹம்சிதன் சிவராசா கருத்து வெளியிடுகையில், கடந்த வாரம் தொடக்கம் எங்களால் அனோஜனைத் தொடர்பு கொள்ள முடியாதுள்ளது.
கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடனான உரையாடலின் போதே நாங்கள் கடைசியாக அனோஜனின் குரலைக் கேட்டோம். அதன் பின் தொடர்பு கொள்ள முடியவில்லை.
பெரும் கவலையுடன் இருக்கின்றோம்
கொழும்பில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் இருந்து அனோஜன் தொடர்பில் கிடைக்கும் தகவல்கள் தவிர, தற்போதைக்கு எங்களுக்கு வேறு எந்தத் தகவல்களும் தெரியவருவதில்லை.

அதன் காரணமாக நாங்கள் பெரும் கவலையுடன் இருக்கின்றோம். எங்கள் சகோதரனின் விடுதலைக்காக சகல சமூகங்களைச் சார்ந்தவர்களும் வெளிக்காட்டும் நேசம், ஒத்துழைப்பு குறித்து நாங்கள் மனதார நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த விடயத்தில் முஸ்லிம்களும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள்.
ஏனைய இனத்தவர்கள் மீது குரோத உணர்வுடன் இனவெறிக் கருத்துக்களை பரப்புவோர் இருந்தாலும் அதனை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அந்த சமூகத்தை ஒட்டுமொத்தமாக மதிப்பிட முடியாது என்றும் ஹம்சிதன் சிவராசா தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.












