நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சபாநாயகன்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவ கார்த்திகேயன் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் சி. எஸ். கார்த்திகேயன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘சபாநாயகன்’. இதில் அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, உடுமலை ரவி, அருண்குமார், ஜெயசீலன் சிவராம், ஷெர்லின் சேத், அக்ஷயா ஹரிஹரன், துளசி சிவமணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலசுப்ரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஆகிய மூவர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார்.
காதல்… செண்டிமெண்ட்.. எக்சன்.. என கமர்ஷியல் திரைப்படமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கிளியர் வாட்டர் பிலிம்ஸ், ஐ சினிமா, கேப்டன் மேகா என்டர்டெய்ன்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அரவிந்த் ஜெயபாலன், ஐயப்பன் ஞானவேல் மற்றும் கேப்டன் மேகவாணன் இசைவாணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
டீசரில் அசோக் செல்வன் கல்லூரியில் பயிலும் மாணவராகவும், காதலுக்காக பொய் செல்பவராகவும் நடித்திருப்பதால்… இளைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
இதனிடையே கடந்த ஆண்டில் ஐந்து திரைப்படங்களில் நடித்து.. எந்த திரைப்படத்தையும் வணிக ரீதியான வெற்றி படமாக அளிக்காத காரணத்தினால்.. அசோக் செல்வன் நடித்த ‘சபாநாயகன்’ எனும் திரைப்படத்திற்கு திரைப்பட வணிகர்களிடத்தில் ஆதரவோ.. ஆர்வமோ.. இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.