முன்னுரிமை வர்த்தக நாடு என்ற அந்தஸ்தை மீண்டும் இந்தியாவுக்கு வழங்க வேண்டுமென டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தை, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 44 பேர் வலியுறுத்தியுள்ளனர்.
வளரும் நாடுகள் தங்கள் நாட்டில் வர்த்தகம் செய்ய ஏதுவாக ஜி.எஸ்.பி. என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது அமெரிக்கா. அமெரிக்க வர்த்தகச் சட்டம் பிரிவு 1974இன் கீழ், 1976 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது தான் ஜி.எஸ்.பி. எனப்படும் பொது முன்னுரிமை அமைப்பு.
இத்திட்டத்தின் படி, வளரும் நாடுகள் தங்கள் நாட்டில் எந்த அளவுக்கு வர்த்தகச் சலுகைகளை அனுபவிக்கின்றனவோ, அதே அளவுக்கு அவர்களது உள்நாட்டுச் சந்தையிலும் தங்களுக்கு சமமான சலுகைகள் வழங்க வேண்டும் என்பது அமெரிக்காவின் நிபந்தனை.
அதன்படி 129 நாடுகளுக்கு ஜி.எஸ்.பி. அந்தஸ்து வழங்கிய அமெரிக்கா, தங்கள் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் 4,800 பொருட்களுக்கு வரி விலக்கு அளித்தது.
இந்தியாவுக்கும் ஜி.எஸ்.பி. அந்தஸ்தை அமெரிக்கா அளித்தது. இதன் மூலம், வாகன பாகங்கள், ஜவுளி பொருட்கள் என 2,000 பொருட்களை எந்த வித வரியும் இன்றி அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்து வந்தது.
2017ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 37 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை வரி விதிப்பு ஏதுமின்றி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது இந்தியா.
ஆனால் ஹார்லி டேவிட்சன் இருசக்கர வாகனங்களுக்கு இந்தியா 100 விழுக்காடு வரி விதிப்பதாகக் குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பதிலடியாக இந்தியாவுக்கான ஜிஎஸ்பி அந்தஸ்தை கடந்த ஜூன் மாதத்தில் ரத்து செய்தார்.
இந்த நிலையில், இந்தியாவுக்கு மீண்டும் ஜி.எஸ்.பி. அந்தஸ்து வழங்க வேண்டும் என ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 26 நாடாளுமன்ற உறுப்பினர்களும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 18 உறுப்பினர்களும் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ராபர்ட் லைத்திசெருக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவுக்கான ஜி.எஸ்.பி. அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போதும், கடந்த ஜூன் ஜூலையில், 40 விழுக்காடு அளவுக்கு அந்நாட்டு பொருட்களின் இறக்குமதி அமெரிக்காவில் அதிகரித்து இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனால் நாள் ஒன்றுக்கு 7 கோடியே 14 லட்சம் ரூபாய் அளவுக்கு அமெரிக்க நிறுவனங்கள் வரி செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் 210 கோடி ரூபாய் அளவுக்கு வரி செலுத்த வேண்டியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதனால் அமெரிக்க நிறுவனங்களுக்கே பாதிப்பு என்பதால், இந்தியாவுக்கு மீண்டும் ஜி.எஸ்.பி. அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே ஹூஸ்டனில் வரும் 22ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியின் போது பிரதமர் நரேந்திரமோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ஒரே மேடையில் ஒன்றாக தோன்றவுள்ளனர்.
அப்போது, வரிவிதிப்பு தொடர்பாகவும், ஜி.எஸ்.பி. அந்தஸ்து தொடர்பாகவும் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

