சிறிய குற்றங்களில் ஈடுபடுபவர்களும் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களும் தனித்தனியே சிறை வைக்கப்பட ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அமைச்சு முன்னெடுக்க வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள சிறைச்சாலைகள் புனரமைப்பு நிலையங்களாக உருவாக்கப்படல் வேண்டும் அல்லது அவை குற்றவாளிகளை உருவாக்கும் இடமாக மாறிவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு மீதான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.
பசிக்காக தங்க மாலையை பறித்த குற்றச்சாட்டின்பேரில் சிறைக்கு செல்வபரும் போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டுக்காக சிறைக்கு செல்பவரும் ஒரே கூண்டில் இருக்கும் நிலையே எமது நாட்டில் தற்பொழுது காணப்படுகின்றது.
இது மிகவும் பாரதூரமானது. இதனால் பசிக்காக திருடியவர் மிகப்பெரிய குற்றவாளியாகவே சிறையிலிருந்து வெளியே வருகின்றார். இந்நிலை மாற்றம் அடைய வேண்டும்.
போதைப்பொருள் கடத்தல் காரர்கள் கணவனின்றி குழந்தைகளுடன் தனியாக தவிக்கும் இளம் தாய்மாரை வைத்தே தமது வியாபாரத்தை இலகுவாக முன்னெடுத்துச்செல்கின்றனர். பொருளாதார ரீதியாக பொது மக்களின் வாழ்க்கை சீர்செய்யப்பட வேண்டும். இதனால் அவர்களது பாதுகாப்பு பலப்படுத்தப்படுமாயின் எவரும் இதுபோன்ற விடயங்களுடன் தொடர்புபடும் நிலைமை உருவாகாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

