Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.நா.மனித உரிமை ஆணையகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை

March 9, 2019
in News, Politics, World
0

ஐ.நா.மனித உரிமை ஆணையகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் 34.01 என்கின்ற பகுதியிலே பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. முடிவுரையாகப் பல விடயங்களை உயர் ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார். முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் இந்த அறிக்கையை வரவேற்கின்றோம். மனித உரிமைகள் உயர் ஸ்தானிகருடைய அலுவலகத்துக்கும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகருக்கும் எங்களுடைய நன்றிகளை முதலில் நாங்கள் தெரிவித்துக்கொள்கின்றோம்.

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன்..

நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

2015 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 01 ஆம் திகதி 30.01 என்கின்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காலத்திலிருந்து வெளிவருகின்ற நான்காவது அறிக்கை இது. இரண்டாவது எழுத்துமூலமான அறிக்கை.

இந்த அறிக்கையிலே இந்தக் கால கட்டத்தில் இலங்கை அரசு செய்த சில விடயங்களைச் சொல்லியிருக்கின்றார். அதில் இலங்கை அரசாங்கத்துக்குப் பாராட்டு தெரிவித்திருக்கின்றார். அதில் அரசாங்கத்துக்கு மேலாகச் சில தனிநபர்களின் செயற்பாடு சிறப்பாக இருந்திருக்கின்றது என்று இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கின்றது.

இந்த அறிக்கையின் முடிவிலே 30.01 என்ற தீர்மானத்தை இலங்கை அரசு தானும் சேர்ந்து இணை அனுசரணை கொடுத்து நிறைவேற்றியதன்மூலம் கடந்த காலத்திலே நிகழ்ந்த மீறல்கள் குறித்து விசாரணை செய்வதும் பதில் கொடுப்பதுமான ஒரு பொறிமுறைக்கு இலங்கை அரசு இணங்கியதற்கமைவாக அதனைச் செயற்படுத்துவதன்மூலம் இலங்கைக்கு நல்ல ஓர் எதிர்காலம் இருப்பதாகவும் அவர் சொல்லியிருக்கின்றார்.

பொறுப்புக்கூறுதல் என்ற சிறப்பான செயற்பாட்டை இலங்கை மேற்கொண்டால்தான் அப்படியான எதிர்காலம் இலங்கைக்குக் கிடைக்கும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அப்படியாக இலங்கை இணங்கிக்கொண்டதன் அடிப்படையில் தீர்மானகரமாக எந்த நகர்வையும் எடுக்காததன் விளைவாக பல பின்னடைவுகள் நாட்டுக்கு ஏற்பட்டிருக்கின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது, 30.01 என்ற தீர்மானத்திலே இலங்கை பொறுப்பெடுத்துக்கொண்ட செயற்பாடுகளைச் சரியான முறையிலே நடத்தி முடிக்காத காரணத்தினால்தான் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மார்ச் 2018 இலே திரும்பவும் வன்முறை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு ஏற்பட்டதாகவும், அது மட்டுமல்ல, ஜனநாயகத்துக்கு விரோதமாகவும் சட்டத்தின் ஆட்சிக்கு விரோதமாகவும் சென்ற வருடம் 2018 ஒக்ரோபர், நவம்பரிலே இலங்கையில் ஏற்பட்ட குழப்பகரமான சூழ்நிலையும் இலங்கை தான் பொறுப்பெடுத்துக்கொண்ட  இந்தப் பொறுப்புக்கூறல் விடயங்களைச் செய்யாததன் விளைவு என்று அவர் அந்த அறிக்கையிலே சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் செயற்பாடு தொடர்பாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றார். அந்த அலுவலகத்தின் வேகக் குறைவு தொடர்பாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். அவ்வாறு பல விடயங்களைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார். அதில் முக்கியமானது, பாதிக்கப்பட்ட தரப்போடு கலந்துரையாடல் செய்கின்ற அரசின் விடயங்களைப் பாராட்டியிருக்கின்றார். ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதிலே இலங்கை பின்னிற்பதை ஒரு பாரிய குறைபாடாக அவர் சொல்லியிருக்கின்றார்.

முடிவுரையைத் தொடர்ந்து இலங்கை அரசு செய்யவேண்டிய பல விடயங்களை உயர் ஸ்தானிகர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

நல்லிணக்கப் பொறிமுறை சம்பந்தமாக மக்களோடு கலந்துரையாடி வெளியிடப்பட்ட அறிக்கையை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

பொறுப்புக்கூறல், நிலைமாறுகால நீதி தொடர்பான விடயங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தை இலங்கையில் ஓர் அலுவலகம் அமைப்பதற்கு அழைப்பு விடுக்கவேண்டும் என்றும் அவர்களின் தொழில்நுட்ப உதவியைத் தொடர்ந்தும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் நிலைமாறுகால நீதிக்கான விசேட தூதுவரை இலங்கைக்கு மீளவும் வரவழைக்கவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.

பொலீஸாருக்கும் மற்றைய பாதுகாப்புத் தரப்பினருக்கும் அவர்களின் செயன்முறைகள் தொடர்பாக இலங்கை அரசு அவர்களுக்கு அறிவுரை கொடுக்கவேண்டும் துன்புறுத்தல்,சித்திரவதை தொடர்பான விடயங்களில் பாதுகாப்புத் தரப்புக்கு அறிவுறுத்தல் கொடுக்கவேண்டும். காணிவிடுவிப்பு தொடர்பில் ஒரு சுயாதீன பொறிமுறையூடாகத்தான் தேசிய பாதுகாப்புக்குக் காணிகள் தேவையா இல்லையா என்று தீர்மானிக்கவேண்டும்.

அத்துடன், மிகவும் முக்கியமான சிபாரிசாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தை ஏற்றுக்கொள்கின்றோம் என்ற சட்டத்துக்கு இலங்கை இணங்கவேண்டும் என்று ஒரு சிபாரிசு கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியாக இலங்கை இணங்கினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பல விடயங்கள் பாரப்படுத்தமுடியும்.

சர்வதேசம் குற்றங்கள் எனக் கருதுகின்ற விடயங்களை இலங்கையிலும் குற்றங்களாக அறிவிக்கின்ற சட்டங்கள் இயற்றப்படவேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. சட்டத்தின் மூலமாக ஒரு கலப்பு நீதிமன்றப் பொறிமுறை ஏற்படுத்தப்படவேண்டும் என்றும், சாட்சிகளின் பாதுகாப்பு சட்டத்தை இன்னமும் பலப்படுத்தவேண்டும் என்றும் பல விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன.

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு அதன் பிரதிபலிப்பாக இன்னொரு சட்டம் கொண்டுவரப்படவேண்டும். தற்போது தடுப்புக் காவலிலே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் உள்ளவர்கள் விடுவிக்கப்படவேண்டும். இப்போது மனித உரிமைகள் தொடர்பாக மீறுகின்றவர்களுக்கு வழக்குத் தாக்கல் செய்யவேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

அண்மையில் பிரதமர் வடக்குக்கு விஜயம் செய்தபோது கூறிய விடயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உண்மையை வெளிக்கொண்டு வருகின்ற பொறிமுறை அதில் தன்டனை – நீதி – செயற்படுவதற்கான கூறுகளும் அடங்கவேண்டும் என்றும் காணாமல் போனோர் அலுவலகத்துக்குப் போதிய நிதி வசதிகள் மற்றைய உதவிகளை அரசு செய்துகொடுக்கவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.

இப்படியான நடவடிக்கைகளை எதிர்காலத்திலே மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் மேற்பார்வை செய்யவேண்டும் என்றும் அவர் கேட்டிருக்கின்றார்.

ஆகவே, இந்த முக்கியமான விடயங்களை உள்ளடக்கிய அறிக்கையை நாங்கள் வரவேற்கின்ற அதேவேளை, தொடர்ச்சியாக மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் மேற்பார்வை இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் விடயங்களைக் கையாள்கின்ற விடயங்களைக் காலவரையறை கொடுக்கப்பட்டு, மேற்பார்வையுடனான பொறிமுறை இருக்கவேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோளாக இருக்கின்றது. இந்த அறிக்கையில் சொல்லப்பட்ட அனைத்து சிபாரிசுகளையும் நாங்கள் வரவேற்கின்றோம். சர்வதேச நீதிமன்றக் குற்றவியலுக்குப் பாரப்படுத்துவதற்கு ஏதுவாக றோம் சட்டத்துக்கு இலங்கை இணங்கவேண்டும் என்று சொன்னதையும் நாங்கள் வரவேற்கின்றோம்.

அப்படியான ஒரு பொறிமுறை ஊடாகத்தான் இந்த விடயங்கள் சர்வதேச நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்த முடியும். சர்வதேச நீதிமன்றத்துக்கு இந்த விடயங்கள் பாரப்படுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை என்றோ அல்லது தடுக்கின்றோம் என்றோ சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டை நான் முற்றிலுமாக நிராகரிக்கின்றேன். தற்போது இலங்கை அரசு றோம் சட்டத்துக்கு இணங்காமல் இருக்கின்ற காரணத்தால் அதைச் செய்ய முடியாமல் இருக்கின்றது என்பதைத்தான் நாம் சுட்டிக்காட்டியிருக்கின்றோம். பாதுகாப்புச் சபையின் ஊடாக இதை அணுகுவது மிகமிகக் கடினமான ஒரு விடயம். இன்னொரு வகையில் சொல்னால் அது முடியாதது என்பதுதான் எங்களுடைய சிந்தனை. ஆனால், அதை பாதுகாப்பு சபை ஊடாக செய்யலாம். செய்யமுடியும். இவர்கள் செய்யவில்லை என்று குறை கூறுகின்றவர்கள் அதை முன்னின்று செய்வார்களானால் நாங்கள் அதை வரவேற்கின்றோம். நாங்களும் அதற்கு ஆதரவு வழங்குவோம். – என்றார்.

Previous Post

பிரிந்தவர்கள் மீண்டும் சேர, ஆச்சரியத்தில் திரையுலகம்

Next Post

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப்பெற அரசு பெரும்பாடு !!

Next Post

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப்பெற அரசு பெரும்பாடு !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures