1915ம் ஆண்டு இலங்கையில் சிங்கள-முஸ்லிம் இனக்கலவரம் ஒன்று ஏற்பட்டது. இது சிங்கள அரசியல் தலைவர்களால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டதாகப் பிரித்தானிய ஆளுநர்கள் அறிந்துக்கொண்டனர். உடனடியாகப் பிரித்தானியா ஆளுநரால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
அத்துடன் அந்தஇனக்கலவரத்திற்குகாரணமானவர்களைக் கைது செய்யவும் கட்டளையிட்டது. அந்த இனக்கலவரத்திற்கான பிரதான காரணிகளாக டீ. எஸ் சேனானாயக்கா, டீ. எஸ் விஜேவர்தனா, டொக்டர் நெயிசர் பெரேரா, ஈ. டீ. த சில்வா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா, எச் அமரசூரிய. ஏ. எச். மொலமூறே போன்ற இலங்கையின் முன்னணி சிங்கள அரசியல் தலைவர்களே இருந்தனர். இவர்களைக் கைது செய்த பிரித்தானிய அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. அவர்களைப் பிரித்தானியாவில் சிறையில் அடைத்தது. அத்துடன் இனக்கலவரத்திற்கு முக்கியக் காரணமான அனைவருக்கும் மரணத் தண்டனை வழங்கப்பட்டது.
இனக்கலவரத்தை ஏற்படுத்திய குற்றம் பாரிய குற்றம் என்றபோதும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை விரும்பாத சேர் பொன்னம்பலம் இராமநாதன், பிரித்தானிய அரசை எதிர்த்து, சிங்கள அரச தலைவர்களின் உயிரைக் காப்பாற்றும் முகமாக மீட்பு போராட்டம் செய்து, அவர்களை மீட்டவர் என்பதும் இலங்கை அரசியல் வரலாற்று நிகழ்வாகும்.
பொன்னம்பலம் இராமநாதனின் போராட்டத்தினால், உயிர் மீண்டு வந்த சிங்கள அரசியலாளர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து, காலிமுகத்திடலில் ஊர்வலம் சென்றமையும் வரலாற்று நிகழ்வாகும். இவ்வாறு பொன்னம்பலம் இரமாநாதன் சிங்கள அரசியல் தலைவர்களை மீட்டிருக்காவிட்டால் டீ. எஸ் சேனானாயக்கா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா போன்ற சிங்கள அரசியல் தலைவர்கள் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்திருக்கவும் முடியாது என, நன்றி கூறும் தற்கால சிங்கள அரசியலாளர்களும் உளர்.

