டெங்குத் தொற்றால் கிளிநொச்சியில் ஒருவர் நேற்று உயிரிழந்தார் என்று மருத்துவமனைத் தரப்புத் தெரிவித்தது. மாவட்டத்தில் இந்தவருடம் இதுவரை 126 பேர் டெங்கு நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்று புள்ளிவிவரம் தெரிவித்தது.
தருமபுரம் உழவனூரைச் ச.கோவிந்தராசா (வயது – 48) குடும்பத் தலைவரே இவ்வாறு உயிரிழந்தார் .
10 நாள்களுக்கு முன்னர் கொழும்புக்குச் சென்றிருந்த இவர் கடந்த 5 நாள்களாகக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார். பிரதேசத்திலுள்ள தனியார் மருந்தகம் ஒன்றில் சிகிச்சை
பெற்றார், குணமடையவில்லை. அதன்பின்னரே நேற்றுக்காலை கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.சேர்க்கும்போது ஆபத்தான நிலையில் அவர் இருந்தார் என்று உறவினர்களால் தெரிவிக்கப்பட்டது. எலிக்காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என்றும் பேசப்பட்டது. உறுதிப்படுத்தி அறிவிக்க இறந்தவரின் குருதி மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களாகக் குறைவடைந்துள்ளன. உயிரிழந்தவரது பிரதேசத்தில் புகையூட்டலோ அல்லது வேறு தடுப்பு நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை. இதுவும் இந்த நிலைக்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. இதில் இனிக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதேச மக்கள் கோருகின்றனர்.
தேசிய தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் இணையத்தளத்திலுள்ள தரவுகளின்படி கிளிநொச்சி மாவட்டத்தில் இந்தவருடம் இதுவரை 126 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.













