உத்தரபிரதேசத்தில் மணக்கோலத்தில் இருந்த மணமகன், மண மேடையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மணமகனின் நண்பனே இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் லகிம்பூர்கேரி மாவட்டத்தில் ராம்பூர் கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது. மண மேடையில் மணமகன் சுனில்வர்மா மணக்கோலத்தில் இருந்தார். அவரது அருகே சுனில் வர்மா-வின் நண்பர் ராம் சந்திரா நின்று கொண்டிருந்தார். உரிமம் பெற்ற துப்பாக்கி ஒன்றை அவர் வைத்திருந்தார். இந்நிலையில் திருமண வைபவங்கள் நடந்துகொண்டிருக்கும் போது மணமகனை நோக்கி இரண்டு தடவை சுட்டுள்ளார் ராம் சந்திரா. முதல் குண்டுக்கு தப்பிய மணமகன் சுனில் வர்மா, இரண்டாவது குண்டுக்கு மேடையிலேயே பலியாகி சாய்ந்து விழுந்தார்.
இதனால், திருமண விழாவே சோகத்தில் மூழ்கியது. மணமகன் இறந்துவிட்டார் என்பதைத் தெரிந்து கொண்ட, ராம் சந்திரா அங்கிருந்து தம்பி ஓடிவிட்டார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின்படி கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ”பழிவாங்கும் வகையில் இந்தக் கொலை செய்யப்பட்டதா ? அல்லது திருமண கொண்டாட்டத்தின் போது தவறுதலாக மணமகன் வர்மா சுட்டுக் கொல்லப்பட்டாரா?” என்பது எல்லாம் ராம்சந்திராவை பிடித்து விசாரித்த பிறகே தெரிய வரும் என்று உள்ளூர் போலீஸார் தெரிவித்தனர். மேடையில் மணமகன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் கடும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது.












