யாழ்ப்பாணம், ஐந்து சந்திப் பகுதியில் கேக் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய போதைப் (மாவா) பாக்கு விற்பனை நிலையம் நேற்று முற்றுகையிடப்பட்டது.
சந்தேகநபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் உரிமையாளர் புத்தளத்தைச் சேர்ந்தவர் என்றும், கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் போதைப் பாக்குக் கொள்வனவு செய்ய வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
விற்பனை நிலையத்தில் இருந்து 50 பாக்குப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தே இந்த விற்பனை நிலையம் இயங்கி வந்தது என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விற்பனை நிலையம் நீண்டகாலமாக இயங்கி வருகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது. விற்பனை நிலையம் நடத்தியவர்கள் பலமுறை கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்று பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில் வடக்கு மாகாண மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் பெர்னான்டோவின் அறிவுறுத்தலுக்கு அமைய காங்கேசன்துறை தரம் 2 பொலிஸ் அத்தியட்சகர் டி.கே.பிரியந்த தலைமையிலான குழு இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டது.
இந்தச் சிறப்புப் பொலிஸ் குழு போதைப் பொருள் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் சிறப்பு நடவடிக்கைகளுக்காக இயங்குகின்றது என்று தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர் விசாரணைகள் நடைபெறுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தார்.
