வட கொரியாவின் பெயரை வேண்டுமென்றே தவறாக குறிப்பிட்ட அமெரிக்க அரசு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும், என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஐ.நா.வுக்கான வடகொரிய துாதரக அலுவலகம் நியூயார்க்கில் செயல்படுகிறது. அந்த அலுவலகத்தில் ரீ சாங் சோல் மூத்த அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். வரிச் சலுகைக்கான அட்டை கோரி அவர் அமெரிக்க அரசிடம் விண்ணப்பித்தார். அதன்படி அவருக்கான
வரிச் சலுகை அட்டை அமெரிக்கா வழங்கியது.
அதில், ‘கொரிய ஜனநாயக குடியரசு’ என்ற பெயருக்குப் பதிலாக ‘வடகொரியா’ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. எழுத்துப் பிழை காரணமாக இந்த தவறு நேர்ந்திருக்கலாம் என்று கருதி வடகொரிய தூதரகம் அட்டையில் திருத்தம் கோரி அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தை அணுகியது. ஆனால் பெயரை திருத்தம் செய்ய அமெரிக்க வெளியுறவுத் துறை
மறுத்துவிட்டது.
இதுகுறித்து வடகொரிய தூதரக மூத்த அதிகாரி ரீ சாங் சோல் கூறியபோது, “எங்கள் நாட்டின் பெயரை அமெரிக்க அரசு வேண்டுமென்றே தவறாகக் குறிப்பிடுகிறது.
இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். எங்கள் நாட்டை ‘கொரிய ஜனநாயக குடியரசு’ என்று மட்டுமே குறிப்பிட வேண்டும்” என்று தெரிவித்தார்.













