மகாராஷ்டிராவில் நெருக்கடிநிலையின் போது சிறை சென்றவர்களுக்கு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான அந்தஸ்து வழங்கிட அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சியின் போது 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி அப்போதைய ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமதுவால் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலை, 1977ம் ஆண்டு மார்ச் 21 வரை 21 மாதங்கள் நடைமுறையில் இருந்தது. அப்போது இந்திராவின் அரசியல் எதிரிகள் பலர் காரணமின்றி சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர். பத்திரிக்கைகளும் தணிக்கை செய்த பிறகே வெளியிடப்பட்டன.
இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டசபை கூட்டத்தொடரில், நெருக்கடிநிலையின் போது சிறை சென்றவர்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கிட வேண்டும் என பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில பா.ஜ. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியது, 1975-ம் ஆண்டு நெருக்கடி நிலையின் போது சிறை சென்றவர்களுக்கு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான அந்தஸ்து வழங்கிடுவது மற்றும் அதற்கான சலுகைகள் வழங்கிடுவது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 2018-ம் ஆண்டு ஜனவரியில் நடக்க உள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கான ஒப்புதல் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












