கிறிஸ்துமஸ் என்றாலே, அந்த வெண்தாடியுடன் குழந்தைகளுக்கு பிரியத்துடன் பரிசுகளை வழங்கி மகிழும் கிறிஸ்துமஸ் தாத்தாதான் நினைவுக்குவருவார். கிறிஸ்துமஸ் தாத்தாவைப்போலவே வெண்தாடியுடன், குழந்தைகள்மீது அளவற்ற பிரியத்துடன் தன் வாழ்க்கையையே குழந்தைகளுக்காக அர்ப்பணித்துக்கொண்ட தாத்தா ஒருவர், சண்டிகரில் இருக்கிறார். ஆம், சண்டிகரைச் சேர்ந்த `லங்கர் பாபா’ என்றழைக்கப்படும் 87 வயது ஜகதீஷ் லால் அஹுஜா, அங்கு உள்ள தெருவோரக் குழந்தைகள் மத்தியில் பிரபலமான தாத்தா. லங்கர் என்றால், கோயில்களில் தினசரி வழங்கப்படும் இலவச உணவைக் குறிக்கும். இந்த லங்கர் பாபாவும் கடந்த பல ஆண்டுகளாக தெருவோரக் குழந்தைகளின் பசிப்பிணியைப் போக்கிவருகிறார் என்பதால் இந்தப் பெயர்.
அஹுஜா 12 வயது சிறுவனாக இருந்தபோது, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் காரணமாக தனது சொந்த ஊரான பெஷாவரிலிருந்து இந்தியாவுக்கு வந்தார். இங்கு வந்ததும், பாட்டியாலாவில் உள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டார். பிறகு அங்கிருந்து அமிர்தசரஸ் முகாமுக்கு மாற்றப்பட்டார். சில மாதங்களில் மீண்டும் பாட்டியாலா முகாமுக்கே திருப்பி அனுப்பப்பட்டார். அங்கே நொறுக்குத்தீனி வியாபாரம் செய்து, வருமானம் ஈட்டினார். நாள் முழுக்கக் கடுமையாக உழைத்ததால் கை-கால்களில் கொப்புளங்கள் வந்தபோதும், தனது குடும்பத்தின் பசிப்பிணியைத் தீர்க்க, ஒருநாள்கூட விடுப்பின்றி உழைத்திருக்கிறார்.
21 வயது இளைஞரானபோது, வீட்டைவிட்டுப் பிரிந்து வேறு இடம் சென்று, ஆரஞ்சுப்பழங்களை வாங்கி விற்கத் தொடங்கினார். பணம் ஓரளவுக்குச் சேர்ந்ததும், வீடுகளை விலைக்கு வாங்கி விற்கத் தொடங்கினார். இந்த வியாபாரத்தின்மூலம் கோடிக்கணக்கில் பணம் சேரத் தொடங்கியது. அதன் பிறகு திருமணம் செய்துகொண்டார். குடும்ப வாழ்க்கையும் நல்லபடியாகச் சென்றது. தனது மகனின் எட்டாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போதுதான் இவரது தனிப்பட்ட வாழ்க்கை, பொதுநல வாழ்க்கையாக மாறியது. தன் மகனின் பிறந்த நாளுக்கு, அந்தப் பகுதியில் இருந்த தெருவோரச் சிறுவர்களை அழைத்து இலவச உணவு அளித்தார். அந்தச் சிறுவர்களைப் பார்க்கும்போது, அவரது பால்யகாலம் நினைவுக்கு வந்தது; பாகிஸ்தானிலிருந்து அகதியாக இந்திய முகாம்களில் தங்கிய வறுமையான காலகட்டத்தை உணர்த்தியது. எனவே, அப்போது தொடங்கிய இலவச உணவுத் திட்டத்தை, விடாமல் தொடர்ந்தார்.
இலவச உணவு வழங்குவதற்காக பிறரிடம் நிதி வசூலிக்கவில்லை. ஆனாலும், உணவு வழங்குவதை கைவிட்டதில்லை. ஒருகட்டத்தில், 2,000 பேர் வரை பயன்பெற்றனர். சிறுவர்கள் மட்டும் என்றில்லாமல் ஏழைகளாக இருந்த பெரியவர்களுக்கும் உணவு வழங்கத் தொடங்கினார். தன் வருமானத்தை மீறி செலவழிக்கவேண்டிய சூழல் வந்ததும், அதற்காக தன்னிடம் உள்ள சொத்துகளை விற்கத் தொடங்கினார். தன்னிடம் இருந்த ஏழெட்டு வீடுகள் வரை விற்று, இலவச உணவு வழங்குவதைத் தொடர்கிறார். இடையில் அவருக்கு வந்த புற்றுநோய்க்காகவும் நிறைய செலவழிக்கவேண்டியிருந்தது.
தற்போது முதுமை காரணமாக இலவச உணவு வழங்கும்போது முழுமையாக அங்கு இருக்கமுடியவில்லை. அதனால் 2000-லிருந்து 500 ஆக எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டார். தன் சேவைக்கான தேவைக்காக, அரசாங்கமும் உதவி செய்தால் நன்றாக இருக்கும் என விரும்புகிறார். வாழும் கிறிஸ்துமஸ் தாத்தாவான லங்கர் பாபாவின் கோரிக்கையை சண்டிகர் அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், இறுதி மூச்சு வரை லங்கர் பாபா இந்த சேவையைத் தொடர்வார்.













