புலம்பெயர் தேசத்தில் எமது விடுதலைப் போராட்டத்திற்காக கடந்த பல தசாப்தங்களாக உழைத்தவர்களினால்தான் புலம்பெயர் தேசத்தில் இருந்து தாயகத்திற்கு கடந்த காலத்தில் கைகொடுக் இயன்றது.
தமிழ் தேசத்தை நேசித்து, தமிழ் தேசியத்தை உயிர் மூச்சாகக் கொண்டு அல்லும் பகலும் அயராமல் தேசப் பணி செய்த அவர்களை நம்பித்தான் தலைமை சில பணிகளை பொறுப்பை அவர்களிடம் கொடுத்துள்ளது.
அவர்கள் தமது குழந்தைகளுடன் தங்கள் பொழுதுகளை கழிக்காமல், அவர்கள் தமது வீடுகளில் தங்கள் பொழுதுகளை கழிக்காமல் காலம் முழுவதும் அலைந்தோடிப் பணி செய்தவர்கள் என்பது எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
அவர்களிடம் தலைமை கொடுத்த பொறுப்புக்களை, தேசத்திற்காக எதையும் செய்தாவர்களும் கடந்த காலத்தில் தேசத்திற்கு விரோதமாக செயற்பட்டவர்களும் போராட்டத்தை விமர்சித்தவர்களும் எப்படிக் கேள்வி கேட்க முடியும்?
கேள்வி கேட்பதற்கு உரிமையுள்ள உடன் நின்றவர்களை நான் தவறு சொல்லவில்லை. ஆனால் சிலர் அன்று எமது போராட்டத்திற்குப் புறம்பாக நின்று செய்த வேலையை இன்று கேள்வி கேட்டல் என்ற பாணியில் செய்வதுதான் ஏற்புடையதல்ல.
எங்கள் விடுதலைப் போராட்டத்திற்காக புலத்தில் தமது வாழ்க்கை, வாழும் காலம், உடல் நலம் எல்லாவற்றையும் கொடுத்து உழைத்தவர்களை நாம் அவமதிப்பு செய்யக்கூடாது. அவர்களுக்காய் உடன் நிற்க வேண்டும்.
கனேடிய மண்ணில் மாத்திரமல்ல, ஊடகப் போராளியாக உலகம் எங்கும் உறவுகளைக் கொண்டு உரையாடல்களை செய்கிறவன் என்கிற வகையில், மாவீரர் மாதத்தில் இந்த விடயத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும் எனது அன்பு உறவுகளே!.
ஊடகப் போராளி கிருபா பிள்ளை











