சுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்திலுள்ள சூர்சே பகுதியில் நடைபெற்ற தேசிய கராத்தேப் போட்டியில், ஜப்பான் கராத்தே தோ இத்தோசுக்காய் கழகத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் இளம் வீரர்கள் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
குறித்த போட்டியின் குமித்தே பிரிவில், 21 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 61 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட ஸ்ரீபாலன் யதுசாலினி மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைச் சுவீகரித்தார்.
அதேவேளை, 84 கிலோகிராமுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான எடைப் பிரிவில் போட்டியிட்ட சிவதாசன் ஜனகனும் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைத் தனதாக்கிக் கொண்டார்.
இவ்விரு வீரர்களுக்கும் சென்செய் கௌரிதாசன் ஷ்வப்தேஷ் பயிற்சிகளை வழங்கியிருந்தார்.
















