‘தித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள வணக்கத்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ள நிலையில் 250 வணக்கத்தலங்கள் முதற்கட்டமாக புனரமைக்கப்படவுள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு முடிவுகளை அறிவித்தபோதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவரது அறிவிப்பில் மேலும் தெரிவிக்கையில்,
‘தித்வா’ புயல் நிலைமைகளால் 758 பௌத்த விகாரைகள், 272 இந்துக் கோயில்கள், 199 முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் 99 கிறிஸ்தவ தேவாலயங்களும் பல்வேறுபட்ட அனர்த்தங்களுக்கு உள்ளாகியுள்ளமை பதிவாகியுள்ளது.
2026.04.27 மற்றும் 2026.06.15 திகதிய அமைச்சரவைத் தீர்மானங்களுக்கமைய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 329.62 மில்லியன் ரூபா உள்ளிட்ட புத்தசாசன நிதியம், மத்திய கலாசார நிதியம் மற்றும் அநகாரிக தர்மபால மன்றத்தால் ஒதுக்கப்பட்டுள்ள 929.69 மில்லியன் ரூபா நிதியைப் பயன்படுத்தி தற்போது குறித்த வணக்கத்தலங்களில் 250 தலங்களில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்துள்ள எஞ்சிய வணக்கத்தலங்களில் மேலும் 144 தலங்களை 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்தி புனரமைப்புச் செய்வதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.











