பிலடெல்பியா விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற பரகுவேக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான மிகவும் பரபரப்பான பீபா உலகக் கிண்ண 16 அணிகள் சுற்று போட்டியில் கிலியான் எம்பாப்பே போட்ட பெனல்டி கோல் மூலம் 1 – 0 என்ற கோல் வித்தியாசத்தில் பிரான்ஸ் மிகவும் இறுக்கமான வெற்றியை ஈட்டியது.

இந்த வெற்றியின் மூலம் முன்னாள் சம்பியன் பிரான்ஸ் கால் இறுதிக்கு முன்னேறியதுடன் கால் இறுதியில் மோரோக்கோவை எதிர்வரும் 9ஆம் திகதி சந்திக்கவுள்ளது.
முன்னாள் சம்பியன் ஜேர்மனியை 32 அணிகள் சுற்றில் பெனல்டி முறையில் வெற்றிகொண்ட பரகுவே நேற்றைய போட்டியில் மிகத் திறமையான தடுப்பாட்ட உத்தியைப் பிரயோகித்து பிரான்ஸுக்கு நெருக்கடியைக் கொடுத்தது.
தடுத்தாடால் உத்தியைக் கையாண்ட அதேவேளை கோல் போடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க பரகுவே முயற்சித்தது. ஆனால், அதன் தூரநிலை கோல் முயற்சிகள் பிரான்ஸ் கோல்காப்பாளர் மைக் மைஞானுக்கு எவ்வித தொந்தரவையும் கொடுக்கவில்லை.
இந்தப் போட்டி ஒட்டுமொத்தத்தில் பிரான்ஸின் எதிர்த்தாடலுக்கும் பரகுவேயின் தடுத்தாடலுக்கும் இடையிலான போட்டியாக அமைந்தது.
இதன் காரணமாக தூரத்தில் இருந்தவாறு கோல் அடிக்க பிரான்ஸ் வீரர்கள் முயற்சித்தனர். ஆனால், அந்த முயற்சிகளை மிக இலகுவாக ஓர்லண்டோ கில் தடுத்து நிறுத்தினார்.
இடைவேளைக்குப் பின்னர் ஆட்டம் சற்று சூடுபிடிக்கத் தொடங்கியது.
ஒரு கட்டத்தில் பரகுவேயின் கொல் எல்லையை ஆக்கிரமித்த பிரான்ஸ் மீண்டும் கோல் போட முடியாமல் திணறியது.
இந் நிலையில் பிரான்ஸின் மாற்று வீரராக 61ஆவது நிமிடத்தில் களம் இறக்கப்பட்ட 21 வயதான இளம் வீரர் டிசயர் டவ், அடுத்த 8ஆவது நிமிடத்தில் பரகுவே பெனல்டி எல்லைக்குள் பந்துடன் ஊடறுத்துச் செல்ல முயற்சித்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் டிசயர் டவ்வை பரகுவே வீரர் டியகோ கோமஸ் முரணான வகையில் வீழ்த்தியதாகக் கருதிய கள மத்தியஸ்தர் இல்கிஸ் டன்டாஷேவ், பெனல்டி வழங்கவேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வீடியோ மத்தியஸ்தரின் உதவியை நாடினார்.
அதனைத் தொடர்ந்து அந்த முரணான விளையாட்டுக்கு பெனல்டி வழங்க மத்தியஸ்தர் தீர்மானித்தார்.
போட்டியின் 69ஆவது நிமிடத்தில் கிலியான் எம்பாப்வே மிகவும் லாவகமாக பெனல்டியை கோலினுள் புகுத்தினார்.
எம்ப்பாப்பே இடதுபுறமாக பந்தை உதைக்க கோல்காப்பாளர் ஓர்லாண்டோ கில் வலதுபுறமாக தாவி ஏமாற்றம் அடைந்தார்.
இந்த பெனல்டி கோலே பிரான்ஸின் வெற்றி கோலாக அமைந்தது.
இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் எம்பாப்பே போட்ட 7ஆவது கோல் இதுவாகும். கோலுக்கான 2 உதவிகளையும் வழங்கிய எம்பாப்பே, தங்கப் பாதணி விருதுக்கான வீரர்கள் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறார்.












