முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, ஏம்பல் குளத்து நீரால் மூடப்படும், தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதியின் தாழ்வாக உள்ள பகுதியை சீரமைக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த நிலையில், அப்பகுதியை நீர் ஓடும் கட்டுமானங்களுடனான (பெட்டி மதகுகள்) உயர்த்தப்பட்ட பாதையாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில், 2 கோடியே 1 இலட்சத்து 69ஆயிரத்து 640 ரூபாய் என்னும் ஒப்பந்தத் தொகையில் முல்லைத்தீவு மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக இந்த வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த வீதி சீரமைப்புப் பணிகளை ரவிகரன் அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதியானது மழைக் காலங்களில் ஏம்பல் குளத்து நீரால் மூழ்குவதால் அவ்வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு முகங்கொடுத்துவந்தனர்.
இந்நிலையில் கடந்த 2025.12.05ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பெரிய இத்திமடு கமக்கார அமைப்பினர் கோரிக்கைக் கடிதமொன்றை வழங்கியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து பெரிய இத்திமடு கமக்கார அமைப்பினரின் கோரிக்கைக்கு அமைவாக கடந்த 2025.12.07 அன்று குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்ற ரவிகரன் நீரால் மூழ்கும் குறித்த பகுதியைப் பார்வையிட்டதுடன், அந்த வீதியைப் பயன்படுத்தும் மக்களின் போக்குவரத்து நெருக்கடியைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக கடந்த 2025.12.22ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் ஆராயும் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த பாதையால் மக்கள் பயணம் செய்ய இயலாத நிலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் எடுத்துரைக்கப்பட்டது. அத்துடன், மக்களின் குறித்த போக்குவரத்து நெருக்கடியை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குரிய ஒதுக்கீடு 2026ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படும் என குறித்த கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த 2026.02.23ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்படி பாதைக்கான மறுசீரமைப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்கள பொறியியலாளருடன் உரையாடியபோது குறித்த வீதியின் சீரமைப்புக்குரிய ஒதுக்கீடு இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து இது தொடர்பில் மீண்டும் கடந்த 2026.04.03ஆம் திகதியன்று வீதி அபிவிருத்தித் திணைக்கள பொறியியலாளரிடம் ரவிகரன் வினவியபோது, நாட்டில் நிலவும் சமகால நெருக்கடி நிலையால் மேற்குறித்த பணி சற்று தாமதமடைவதாகவும் எனினும் கடந்த ஏப்ரல் மாதம் பத்தாம் மாதத்திற்கு முன்னர் குறித்த வீதிச் சீரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரவிகரனின் தொடர்ச்சியான வலியுறுத்தலுக்கமைய தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் பாதையின் தாழ்வுப் பகுதி சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் இந்த கள விஜயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுடன் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இ.கிரிதரன், சமூக செயற்பாட்டாளர் கு.கஜீவன் ஆகியோர் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
















