தமிழ் சினிமாவில் தனக்கான சந்தை மதிப்பை உண்டாக்கி, அதனை தொடர்ந்து விரிவு படுத்தி வரும் பன்முக ஆளுமை திறன் கொண்ட விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘அப்பா குட்டி’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் மு .மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அப்பா குட்டி’ எனும் திரைப்படத்தில் விஜய் அண்டனி, பிரீத்தி அஸ்ராணி, விதான்யா, பக்ஸ் பகவதி பெருமாள், ஹரி பிரியா, மதன், சித்ரா லக்ஷ்மணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார் , ஜென்சன் திவாகர், முருகானந்தம், மூணார் ரமேஷ் , லிஸி அண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஜய் அண்டனி இசையமைத்திருக்கிறார். தந்தை- மகள் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக விவரித்திருக்கும் படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜய் அண்டனி பிலிம் கொர்ப்பரேசன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாத்திமா விஜய் அண்டனி தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை மீரா விஜய் அண்டனி வழங்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், தற்போது படப்பிடிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும் படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். அத்துடன் இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய் அண்டனியின் தீர்க்கமான எக்சன் அவதார தோற்றமும், தோளில் அவருடைய பெண் பிள்ளையின் உறக்கமும் என இடம் பிடித்திருப்பது… இந்த படம் அழுத்தமான படைப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
