அஸ்வெசும பயனாளர்களில் ஒரு பிரிவினருக்கு கடந்த ஏப்ரல் மாதம் நலன்புரி நன்மைகள் சபையினால் இரண்டு முறை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதன் மூலம் சுமார் 5,000 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்யப்பட்டிருப்பதாக சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுகுறித்து சுதந்திர சட்டத்தரணிகள் சங்கத்தினால் சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் நிதி காணாமல்போனமை தொடர்பில் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி மு.ப 9.23 மணயளவில் உங்களது மின்னஞ்சர் முகவரிக்கு முறைப்பாடொன்றை அளித்திருந்தோம். பொதுமக்கள், அரச அதிகாரிகள் மற்றும் ஏனைய நிறுவனங்களிடமிருந்து கிடைக்கப்பெறும் கடிதங்கள், மின்னஞ்சல்கள் தொடர்பில் செயற்படவேண்டிய விதம் குறித்து உங்களுக்கு நினைவூட்டியும், அதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் நலன்புரி நன்மைகள் சபையின் ஊடாக சுமார் 5,000 இலட்சம் ரூபாவை சற்றுக் குறைவான தொகை மேலதிகமாகச் செலுத்தப்பட்டுள்ளமை பற்றிய ஒரு சம்பவம் எமக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.
திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் நிதி காணாமல்போன அதே பாணியில் அஸ்வெசும பயனாளர்களுக்கு இரண்டு முறை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளமையானது அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவத்தின் நிலவும் ஒழுங்கீனம் மற்றும் பொறுப்பற்ற தன்மையையே காண்பிக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 23 இலட்சம் குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அவர்களில் ஒரு பிரிவினருக்கு அஸ்வெசும கொடுப்பனவுகள் இரண்டு முறை வழங்கப்பட்டுள்ளன. மற்றுமொரு பிரிவினருக்கு அரசாங்கத்தினால் போனஸ் கொடுப்பனவாக வழங்கத் தீர்மானிக்கப்பட்ட தொகையை விட அதிக பணம் வங்கிக் கணக்குகளில் வைப்பில் இடப்பட்டுள்ளது.
திறைசேரியினால் வழங்கப்பட்டு, நலன்புரி நன்மைகள் சபையினால் அஸ்வெசும பயனாளிகளின் கணக்குகளுக்கு இந்த நிதி அனுப்பப்பட்டுள்ள விவகாரத்தில், உரிய சட்டதிட்டங்கள் மற்றும் நிதி முகாமைத்துவ நடைமுறைகள் மீறப்பட்டுள்ளன. இது பாரிய மோசடியாகும்.
எனவே அரசியலமைப்பின் 148 ஆவது உறுப்புரையின் பிரகாரம் நிதி அதிகாரம் கொண்ட பாராளுமன்றம் பின்வரும் கேள்விகளுக்கு உடனடியாகப் பதில் வழங்கவேண்டும்.
ஏப்ரல் மாதம் பணம் கிடைக்கவிருந்த சுமார் 18 இலட்சம் குடும்பங்களில் எத்தனை குடும்பங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக பணம் கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளது?, கேகாலை, மொனராகலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற இவ்வாறான இரட்டைக் கொடுப்பனவுகள் தொடர்பில் இதுவரை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா?, இரண்டு முறை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக பணம் பெற்றுக்கொண்ட அஸ்வெசும பயனாளர்களின் எண்ணிக்கை எத்தனை? ஆகிய கேள்விகளுக்குப் பதில் வழங்குங்கள் என அக்கடிததத்தில் கோரப்பட்டுள்ளது.

