இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் நடைபெறவிருந்த இந்தியா–பாகிஸ்தான் போட்டியைப் புறக்கணிக்க பாகிஸ்தான் எடுத்த முடிவுக்கு இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு அனுப்பிய கடிதத்தில், கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பெப்ரவரி 15ஆம் திகதி நடைபெறவிருந்த இப்போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும், பாதுகாப்பு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளும் முழுமையாக செய்யப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் போட்டி ரத்தானால் இலங்கை கிரிக்கெட்டுக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாரிய நிதி இழப்பு ஏற்படும் என்றும், சுற்றுலா வருகையிலும் பாதிப்பு உண்டாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த கடிதத்தில் சவாலான காலங்களில் இலங்கை பாகிஸ்தானுக்கு வழங்கிய ஆதரவையும் ஷம்மி சில்வா நினைவூட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
