கனடாவில் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் விருந்தினராக அழைக்கப்பட்ட நிகழ்வு பலருக்கும் அபிப்பிராயங்களை உருவாக்கியுள்ள நிலையில் அது குறித்து என் கருத்துக்களை வெளிப்படையாக பகிர்வது எமது அரசியல் செயற்பாடுகளுக்கு அவசியமான ஒன்று எனக் கருதுகிறேன்.
முதலில் ஒன்றைச் சொல்ல வேண்டும். நாம் இஸ்லாமிய உறவுகளை மிகவும் நேசிக்கிறோம். எமது தமிழர் தாயகத்தில் அவர்களுக்குள்ள உரிமைகளையும் இடத்தையும் மதிப்பையும் எமது தேசிய தலைமை என்றும் வழங்கியுள்ளது. அதனையே ஒவ்வொரு ஈழத் தமிழ் மக்களும் மனம்கொண்டு தமிழ் பேசும் ஒரு சமூகமாக இஸ்லாமிய உறவுகளுடன் நிற்போம். இது முக்கியமானது.
ரவூப் ஹக்கீம் அவர்களை கனேடிய தமிழ் காங்கிரஸ் அழைத்தது தமிழ் மக்களுக்கு ஏன் இனக்கிலேசத்தை ஏற்படுத்தியது என்பதை நாம் இனிப் பார்ப்போம்.
ரவூப் ஹக்கீம் அவர்கள், இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் அரசில் நீதியமைச்சராக இருந்தார். இனப்படுகொலை நடந்து சில வருடங்களின் இப்படி மகிந்தவின் நீதியமைச்சராக இருந்தவேளை எமது இனம் பன்னாட்டு நீதிக்காக ஈழ மண்ணில் துடித்தது. அத்துடன் ஶ்ரீலங்காவின் நீதித்துறை என்பது ஈழத் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி அழிப்பதை இலக்காக கொண்டது. அதற்கு ரவூப் ஹக்கீம் அமைச்சராக இருந்தார் என்பதே எமக்கு அதிருப்தியைத் தருகின்றது.
தமிழர் தாயகத்தில் எத்தனை நல்ல அரசியல்வாதிகள் உள்ள நிலையில் ஏன் கனேடிய தமிழ் காங்கிரஸ் ரவூப் ஹக்கீம் அவர்களை அழைக்க வேண்டும்? ஈழ மக்கள் பன்னாட்டு அரங்கில் நீதிக்காக போராடும் நிலையில் இது ஒரு பின் தள்ளுகின்ற பிழையான செயற்பாடு என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து இதனை சரி செய்ய வேண்டும்.
கடந்த காலத்தில் கனேடிய தமிழ் காங்கிரஸ் எடுத்த சில நடவடிக்கைகள் காரணமாக கனேடிய தேசத்தில் மாத்திரமின்றி, புலம்பெயர் நாடுகளிலும் தாயகத்திலும் பெரும் எதிர்ப்பும் சர்ச்சையும் உண்டாகியது. அப்படியான நிலையில் ஏன் இப்படியான செயற்பாடுகளில் கனேடிய தமிழ் காங்கிரஸ் ஈடுபடுகின்றது?
எதிர்வரும் காலத்தில் தமிழ் மக்களின் மனம் கோணாத செயற்பாடுகளில் கனேடிய தமிழ் காங்கிரஸ் ஈடுபட வேண்டும் என்பதையும்ட உங்கள் செயற்பாடுகள் எங்கள் விடுதலைப் பயணத்தை நீதிக்கான பயணத்தை வலுப்படுத்த வேண்டும். ஈழத் தமிழ் மக்கள் சார்ந்த அமைப்புக்கள் யாவும் பொறுப்புடன் நடப்பது எங்கள் மண்ணில் நிகழ்ந்த தியாகத்திற்கு உண்மையாக இருப்பதாகும்.
அதுவே எங்கள் மக்களின் அமைதி வாழ்வுக்கும் அடிப்படை.
ஊடகப் போராளி கிருபா பிள்ளை
