முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கமநலசேவைநிலையப்பிரிவிலுள்ள, புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்புப் பகுதியில் அமைந்துள்ள வீரசிங்கம் மற்றும் சித்தாறு அணைக்கட்டுக்களை அமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் கேள்வி எழுப்பிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த அணைக்கட்டுக்களின் வேலைத்திட்டங்களை விரைவாக முடிவுறுத்தி விவசாயிகளின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்குள் குறித்த அணைக்கட்டுக்களின் வேலைகளை முடிவுறுத்துவதற்கு ஒப்பந்ததாரர்கள் உடன்பட்டுள்ளதாகத் தெரிவித்த கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர், அவ்வாறு பெப்ரவரி மாத்திற்குள் குறித்த வேலைத்திட்டங்கள் முடிவுறுத்தப்படாவிட்டால் தம்மால் உரிய்நடவடிக்கை முன்னெடுக்கப்படுமெனவும் பதிலளித்துள்ளர்.
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களிலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
உலகவங்கியின் நிதி உதவியில் ‘சியாப்’ நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைபின்கீழ் காணப்படும் வீரசிங்கம் மற்றும் சித்தாறு அணைக்கட்டுக்களை அமைப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் எம்மிடம் முறையிட்டுள்ளனர்.
இதனால் தாம் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துவருவதாகவும் எம்மிடம் முறையிட்டுள்ளனர்.
குறித்த சித்தாறு மற்றும் வீரசிங்கம் அணைக்கட்டுக்களை அமைப்பதற்காக விவசாயிகளால் ஒருபோகம் நெற்செய்கை மேற்கொள்ளாது விட்டுக்கொடுப்பையும் மேற்கொண்டதாக எம்மிடம் முறையீடுசெய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக நான்கு மாதகாலத்திற்குள் முடிவுறுத்தப்படவேண்டிய இந்த அணைக்கட்டுக்கள் அமைக்கும் வேலைத்திட்டங்கள், அந்தக் கால எல்லையைத் தாண்டியும் இதுவரை முடிவுறுத்தப்படவிவ்லை.
எனவே இதனால் புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பைச்சேர்ந்த விவசாயிகள் எதிர்நோக்கும் பாதிப்புக்களை கவனத்திற்கொண்டு இந்த அணைக்கட்டு வேலைத்திட்டத்தினை விரைவாக முடிவுறுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
இந்தப் பிரச்சினைக்கு மாவட்டத்திற்குள் தீர்வுகாணத் தவறினால் பாராளுமன்றம்வரை இவ்விடயத்தை எடுத்துச்செல்வேன். விவசாய அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் விவசாய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரவேண்டியிருக்கும்.
ஆகவே விரைந்து குறித்த அணைக்கட்டு வேலைத்திட்டங்களை முடிவுறுத்தி விவசாயிகளிடம் கையளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.
இதன்போது முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் பதிலளிக்கையில்,
தற்போதுதான் புதிதாக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளேன். இருப்பினும் கடந்த 21.01.2026புதன்கிழமையன்று குறித்த இடங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளேன்.
அத்தோடு அதனைத் தொடர்ந்து கிளிநொச்சியில் அமைந்துள்ள ‘சியாப்’ திட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் இதுதொடர்பில் பேசியிருந்தேன்.
அமைக்கப்பட்டுவரும் அணைக்கட்டுக்களின் அமைப்புகளில் ‘டித்வா’ புயல் அனர்த்தம் காரணமாக
சேதம் ஏற்பட்டிருப்பதாகவும், எனவே அணைக்கட்டுக்களை அமைப்பதற்கு மேலதிக நிதி தேவைப்படுவதாகவும் ஒப்பந்ததார் தரப்புக்களால் இதன்போது கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மேலதிகநிதி தேவையெனில் ‘சியாப்’ திட்ட தலைமை அலுவலகத்துடன் தாம் கலந்துரையாடி ஒப்பந்ததாரர்களுக்கு மேலதிக நிதியை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதாக ‘சியாப்’ திட்ட கிளிநொச்சி அலுவலக உத்தியோகத்தர்களால் ஒப்பந்ததாரர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை பெப்ரவரி மாதத்திற்குள் குறித்த அணைக்கட்டுக்களின் வேலைத்திட்டங்கள் முடிவுறுத்தப்படவேண்டுமெனவும் ஒப்பந்ததாரர்களுக்கு இதன்போது அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அந்தவகையில் ஒப்பந்ததாரர்களாலும் இந்த முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்து.
எனவே பெப்ரவரி மாதத்திற்குள் குறித்த அணைக்கட்டுக்களின் வேலைத்திட்டங்கள் முடிவுறுத்தப்படவில்லை எனில் உரிய நடவடிக்கை எம்மால் மேற்கொள்ளப்படும்.
அதுவரை எமக்குகால அவகாசத்தினைத் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன் என முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் தெரிவித்தார்.

