எங்களுடைய ஜீ ஸ்குவாட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் தொடர்கிறது என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீதான எதிர்மறை விமர்சனங்கள் குறித்து, அவர் விளக்கம் அளிப்பதற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியதாவது….
ஆறு ஆண்டுகளுக்கு முன் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாகவும்.. மூன்று ஆண்டுகளாக தொடர்பில் இருக்கும் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து பணியாற்ற கிடைத்த வாய்ப்பின் காரணமாகவும் தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். இப்படத்தின் பணிகள் நிறைவடைந்ததும் கார்த்தி நடிப்பில் ‘கைதி 2’ படத்தினை இயக்க உள்ளேன்.
இடையே கிடைத்த ஓய்வு நேரத்தில் நண்பரும், இயக்குநருமான அருண் மாதேஸ்வரனின் வேண்டுகோளுக்கு இணங்க ‘D C’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அப்படத்தின் பணிகள் விரைவில் நிறைவடையும் என நம்புகிறேன்.
உண்மையை விவரிக்க வேண்டும் என்றால் இயக்குவதை விட நடிப்பது கஷ்டமாக உள்ளது. ஒரு அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காகவே நடிக்க ஒப்புக்கொண்டேன். தொடர்ந்து நடிக்கும் எண்ணம் இல்லை. படங்களை இயக்குவதற்கு தான் முன்னுரிமை அளிப்பேன்.
போதை பொருள் பாவனைக்கு எதிராக தமிழக காவல்துறையினர் ஒருங்கிணைத்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கு பற்றி போதை பொருள் பாவனைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.
‘கைதி 2’, ‘விக்ரம் 2’, ‘ரோலக்ஸ்’ மற்றும் எங்களுடைய தயாரிப்பில் தயாராகி வரும் ‘பென்ஸ்’ ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் தொடர்கிறது” என்றார்.

