எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று சனிக்கிழமை மீண்டும் இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றை ஒன்றிணைத்து, ஒரு பலமான கூட்டணியை உருவாக்குவது குறித்த இந்தப் பேச்சுவார்த்தைகள் தற்போது தீர்மானமிக்க கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவில், குறித்த கலந்துரையாடல் மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாகவும், இது ஒரு வெற்றிகரமான முடிவை நோக்கி நகரும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கலந்து கொண்டதோடு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல, ருவான் விஜேவர்தன, நவீன் திஸாநாயக்க, அகில விராஜ் காரியவசம் மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கடந்த காலங்களில் ஒரே கட்சியின் கீழ் ஒன்றாகப் பணியாற்றியவர்கள் என்பதுடன், தற்போது நிலவும் அரசியல் சவால்களை எதிர்கொள்ள இவர்களின் ஒருங்கிணைப்பு அவசியமாகிறது என இவ்விரு கட்சிகளினதும் ஏனைய உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, எதிர்வரும் தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கு எதிராக ஒரு பலமான மற்றும் ஒருங்கிணைந்த எதிரணி அமைய வேண்டியது அவசியம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில் இந்த இரண்டு கட்சிகளும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாரம்பரிய வாக்குகளும், சஜித் பிரேமதாசவின் தலைமையிலான தற்போதைய மக்கள் ஆதரவும் ஒன்றிணையும் போது, அது ஒரு பாரிய தேர்தல் சக்தியாக உருவெடுக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பெருமளவான உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டை கட்சியின் தலைமைத்துவத்துக்கு தெரிவித்துள்ளனர்.
இரு கட்சிகளும் அடிப்படையில் ஜனநாயகக் கொள்கைகளைக் கொண்டவை என்பதால், கொள்கை ரீதியாக ஒன்றிணைவதில் பெரிய சிக்கல்கள் இருக்காது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போதைய பேச்சுவார்த்தைகளில் மிக முக்கியமான சவாலாக இருப்பது தலைமைத்துவப் பங்கீடு மற்றும் வேட்புமனு ஒதுக்கீடு ஆகும். அதற்கமைய இந்த சந்திப்பில் இது குறித்தே விரிவாக ஆராயப்பட்டிருப்பதாகவும், மேலும் ரணில் – சஜித் சந்திப்பு குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

