பாராளுமன்ற தகவல் கட்டமைப்பு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தில் இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பான விசாரணையின் முழு அறிக்கை இன்னும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. அது வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
பணியாளர் ஆலோசனைக் குழு கூடுகிறது. இந்நிலையில், பாராளுமன்ற தகவல் கட்டமைப்பு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தில் இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பான விசாரணையின் முழு அறிக்கை எங்களுக்கு அனுப்பப்படவில்லை.
முழு அறிக்கையையும் அனுப்பாமல் அந்த விடயங்கள் தொடர்பில் எப்படி எங்களது கருத்துக்களை தெரிவிக்க முடியும்? அந்த விசாரணை அறிக்கையை நாங்கள் படித்து பார்க்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் குறித்து நாம் உணர்திறன் உடையவர்களாக இருக்க வேண்டும்.
அதற்கு சபாநாயகர் அறிக்கையை பணியாளர் ஆலோசனைக் குழுவுக்கு சமர்ப்பித்த பின்னர் எங்களுக்கு அது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க முடியும் என்றார்

