தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் நிகரற்ற குணசித்திர நடிகராக புகழ் பெற்ற சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய இணைய தொடரான ‘தடயம் ‘ ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் விரைவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தடயம் ‘ எனும் இணையத் தொடரில் நடிகர் சமுத்திரக்கனி கதையை வழிநடத்திச் செல்லும் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த இணைய தொடரை தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா தயாரிக்கிறார். இந்த இணைய தொடர் குறித்த ஏனைய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ‘விநோதயசித்தம்’ எனும் திரைப்படம் ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகி பாரிய வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து மீண்டும் சமுத்திரக்கனி நடிப்பில் ‘தடயம் ‘எனும் இணைய தொடர் ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாவதால் அவருடைய ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் கதையின் நாயகனான சமுத்திரக்கனி காவல்துறையில் பணியாற்றும் காவலர் தோற்றத்தில் தோன்றுவதால் இணைய தொடர் கிரைம் திரில்லர் தொடராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

