கடந்த ஆண்டில் மலையாள மொழியில் தயாராகி பான் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்த ‘லோகா – சாப்டர் 1 சந்திரா’ படத்தில் நடித்திருந்த டொவினோ தோமஸ் நடிப்பில் தயாராகி வரும் ‘அதிரடி ‘எனும் திரைப்படத்தில் அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயரையும், அதன் தோற்றத்தையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் அருண் அனிருத்ரன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘அதிரடி ‘ எனும் திரைப்படத்தில் டொவினோ தோமஸ், பஸில் ஜோசப், ரியா சுபு , வினித் ஸ்ரீனிவாசன், தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சாமுவேல் ஹென்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைக்கிறார். பால்சன் ஸ்காரியா- அருண் அனிருத்ரன் இணைந்து எழுதி இருக்கும் இந்த கதையை பஸில் ஜோசப் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் டொக்டர் அனந்து என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பஸில் ஜோசப் மற்றும் டொக்டர் அனந்து ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தில் நடிக்கும் பஸில் ஜோசப்பின் கதாபாத்திர தோற்றமும், பெயரும் வெளியிடப்பட்டது. தொடர்ந்து தற்போது இப்படத்தில் நடிக்கும் டொவினோ தோமஸ், ‘ஸ்ரீ குட்டன் வெல்லயானி’ எனும் கதாபாத்திரத்தில் பாடகராக தோன்றுகிறார் என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.

