‘வா வாத்தியார் படத்தில் எம் ஜி ஆரின் உடல் மொழியில் திரையில் தோன்றுவதற்காக ஒவ்வொரு நாளும் எம்ஜிஆர் நடித்த படங்களை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டு அவருடைய உடல் மொழியை கொண்டுவர முயற்சி செய்திருக்கிறேன்’ என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ வா வாத்தியார்’ எனும் திரைப்படம் பல தடைகளை கடந்து, போகி பண்டிகை தினமான ஜனவரி 14 ஆம் திகதியன்று படமாளிகையில் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் பட வெளியீட்டிற்கு முன் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் பங்கு பற்றி நடிகர் கார்த்தி ‘வா வாத்தியார்’ பட அனுபவம் குறித்து பேசுகையில், ” இயக்குநர் நலன் குமாரசாமி வா வாத்தியார் படத்தைப் பற்றிய கொன்செப்டை சொன்னவுடன் மிகவும் பிடித்திருந்தது.
பயமாகவும் இருந்தது. அந்த கதாபாத்திரத்திற்காக பிரத்யேக பயிற்சியும், ஒத்திகையும் வேண்டும் என சொன்னார். ஆனால் நான் ஒவ்வொரு நாளும் எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களை திரும்பத் திரும்ப பார்த்தேன்.
எம்ஜிஆர் திரையில் மட்டுமல்ல அசலாகவும் ஒரு நாயகனாகவே இருந்திருக்கிறார். அதை ரசிக்க கூடிய வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படமாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது” என்றார்.
