தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான திருவீர் கதையின் நாயகனாக நடிக்கும் ‘ஓ.. சுகுமாரி’ எனும் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திர தோற்றப் பார்வையை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் பரத் தர்ஷன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஓ.. சுகுமாரி’ எனும் திரைப்படத்திற்கு சி ஹெச் குஷேந்தர் ஒளிப்பதிவு செய்ய பரத் மஞ்சு ராஜு இசையமைக்கிறார்.
கிராமத்து பின்னணியிலான கதையாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை கங்கா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வர ரெட்டி மூலி தயாரிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாராகி வரும் ‘ஓ.. சுகுமாரி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் படத்தின் கதையின் நாயகியாக நடிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் படக் குழுவினர் அவர் இப்படத்தில் தோன்றும் டாமினி எனும் கதாபாத்திரத்தின் பெயரையும், அவரது தோற்றத்தையும் பிரத்யேக புகைப்படமாக வெளியிட்டுள்ளனர். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் எளிய பெண்ணின் தோற்றத்தில் தோன்றுவது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
