வெனிசுலாவில் அமெரிக்க இராணுவத் தலையீடு மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டது தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
அரசாங்க செய்தியாளர் சந்திப்பின் போது இன்று (4) வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதன்போது, பத்திரிகையாளர்களுக்கு பதிலளித்த அவர், சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தை மீறுவது குறித்து மேலும் நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாகக் தெரிவித்துள்ளார்.
உருக்கு கவச பதுங்கு குழி வாசலில் சிக்கிய மதுரோ! நேரலையில் பார்த்த ட்ரம்ப்
சர்வதேச சட்டம்
“ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின்படி, அனைத்து நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளும் இந்தக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

அதன்படி, நாளை அவசரமாக ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. எங்கள் தரப்பிலிருந்து, இந்தக் கூட்டம் தாமதமின்றி நடத்தப்பட வேண்டும் என்று நாங்களும் முன்மொழிந்துள்ளோம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவையான நடவடிக்கை
ஐ.நா. சாசனம் மற்றும் அதன் அடிப்படைக் கொள்கைகளை மீறுவதற்கு எதிராக ஐ.நா. பொதுச் சபையிலும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது என்றும் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவின் நடவடிக்கைகளை கடுமையாகக் கண்டித்து ஜே.வி.பி அறிக்கை வெளியிட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அரசியல் கட்சிகள் அரசாங்கத்திலிருந்து வேறுபட்டவை என்றும், அவை தங்கள் சொந்தக் கருத்துக்களைக் கொண்டிருக்கலாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

