ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் விஜய் கடைசியாக நடிக்கும் ‘ ஜனநாயகன் ‘ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘செல்ல மகளே..’ எனும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஹெச் .வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ எனும் திரைப்படத்தில் விஜய் , பூஜா ஹெக்டே, பொபி தியோல், மமீதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் , பிரியா மணி , நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பொலிட்டிகல் எக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வரும் தருணத்தில்… இப்படத்தில் இடம்பெற்ற ‘ கோடி நிலவுகள் வரும் அழகே… கோடி கவிதைகள் தரும் பொருளே..’ எனத் தொடங்கும் மூன்றாவது பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத , நட்சத்திர நடிகரும், அரசியல்வாதியும், பின்னணி பாடகருமான தளபதி விஜய் பாடியிருக்கிறார்.
அனிருத்தின் வசீகரிக்கும் இசை கோர்வையில் உருவான இந்த தாலாட்டுப் பாணியிலான பாடலும், விஜய்யின் குரலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதன் காரணமாக இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
இதனிடையே விஜய் நடிப்பில் தயாராகி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

