இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி சு.ஜெய்சங்கர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள அவர், நாளை செவ்வாய்க்கிழமை (23) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த விஜயமானது இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கையை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பேரழிவுகளைச் முகாமைத்துவம் செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட சாகர் பந்து திட்டத்தின் பின்னணியில் மேற்கொள்ளப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பேரிடர் மீட்புப் பணிகளின் அடுத்தகட்டமான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒருநாள் விஜயத்தில் அவர் வடக்கு, கிழக்கு மற்றும் மலைய தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோரையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

