அறிமுக நடிகர் வேல்முருகன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ரகசிய சினேகிதனே’ எனும் திரைப்படம் முகநூல் மூலமாக உருவாகும் காதலை பற்றியும், அதன் விபரீத விளைவுகளை பற்றியும் விவரிக்கும் படைப்பு என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் சேகர் கன்னியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரகசிய சினேகிதனே’ எனும் திரைப்படத்தில் வேல்முருகன், ஸ்வேதா ஸ்ரீம்டன், குரு பிரகாஷ், பிரதீபா, பிரசாந்தினி, நிஷா , கந்த வேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஷாம் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டொக்டர் சுரேஷ் மற்றும் எஸ். சுப்ரமண்யா ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
சமூக வலைதளங்கள் மூலமான கூடா நட்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை புனிதா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லதா சேகர் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” திருமணமாகி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதிகளில்.. பெண்ணிற்கு பல் மருத்துவர் ஒருவருடைய தொடர்பு சமூக வலைதளங்கள் மூலமாக கிடைக்கிறது.
தொடக்கத்தில் எண்ண பகிர்வாக தொடங்கும் இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமாகிறது. இதனால் கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடும், விரிசலும் ஏற்படுகிறது.
இந்த தருணத்தில் பல் மருத்துவருடன் தொடர்பு கொண்ட அந்த பெண்மணி மர்மமான முறையில் மரணமடைகிறார். இதற்கான பின்னணி என்ன? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை” என்றார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து எதிர்வரும் 26 ஆம் திகதியன்று படமாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தை பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்- தயாரிப்பாளருமான என். பி. இஸ்மாயில் வழங்குகிறார்.

