டித்வா சூறாவளியின் தாக்கத்தால் வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் குவிந்துள்ள குப்பைகள் சுமார் 10 நாட்களுக்குள் முழுமையாக அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் திலக் ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.
கொலன்னாவை பகுதியில் மாத்திரம் சுமார் 8,000 தொன் குப்பைகள் குவிந்துள்ளதாகவும், சுமார் 2 நாட்களில் அதை அகற்ற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
மேலும், கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியா போன்ற பகுதிகளில் சுமார் 10,000 முதல் 12,000 தொன் குப்பைகள் குவிந்துள்ளன.
தற்போது, மேல் மாகாண சுற்றாடல் அதிகாரசபை நாள் ஒன்றிற்கு சுமார் 100 லொரிகளை அனுப்பி மிகவும் வெற்றிகரமான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இவை அனைத்தையும் சுமார் 10 நாட்களில் முடித்துவிடுவார்கள் என நினைக்கிறேன். ஆனால் இந்த குப்பை உற்பத்தி எப்போதும் நடந்துகொண்டே இருக்கிறது. ஏனென்றால் சில வீடுகள் மற்றும் வணிக இடங்கள் இன்னும் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.
அனர்த்தத்திற்கு பின்னர் இது ஒரு பேரழிவு என மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் திலக் ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.

