வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை மேலும் வலுப்பெறுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய சம்பந்தப்பட்ட சகல துறையினருடனும் கலந்துரையாடி முன்னாயத்த நடவடிக்கைககள் எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்தியா, பாக்கிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து விசேட குழுக்கள் நாட்டுக்கு வந்து மீட்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இவை தவிர மேலும் பல நாடுகளிடமிருந்து நிவாரண உதவிகளும் கிடைக்கப் பெறுகின்றன. இந்தியா, துருக்கி, பங்களாதேஷ், இஸ்ரேல், ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து பாரிய நிவாரண உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை மேலும் வலுப்பெறுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமானது சம்பந்தப்பட்ட சகல துறையினருடனும் கலந்துரையாடி முன்னாயத்த நடவடிக்கைககளை முன்னெடுத்துள்ளது. வடக்கு மாகாணத்தில் வழமைக்கு மாறாக அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதேபோன்று வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வழமையை அண்மித்தளவில் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேல் மற்றும் தென் மாகாணங்களில் வழமையை விடக் குறைவான மழை வீழ்ச்சி பதிவாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எதிர்வு கூறல்களுக்கமைய சகல முன்னாயத்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தித்வா புயலின் போது பதிவான அதிகூடிய மழைவீழ்ச்சி காரணமாக மண் ஈரப்பதன் அதிகரித்துள்ளது. நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. எனவே சிறியளவிலான மழை வீழ்ச்சி கூட பாரிய தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும். எனவே மக்கள் இது குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும். மண் ஈரப்பதன் அதிகரித்துள்ளதால் சிறிய மழை வீழ்ச்சியின் போது கூட மண்சரிவுகள், கற்பாறைப் பிறழ்வுகள் ஏற்படலாம்.
எவ்வாறிருப்பினும் முப்படையினர் உள்ளிட்ட சிவில் பாதுகாப்பு துறையினர் தயார் நிலையிலேயே உள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக வடகீழ் பருவ பெயர்ச்சியின் போது பதிவாகிய மழை வீழ்ச்சியின் அளவை அடிப்படையாகக் கொண்டே வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எதிர்வு கூறலை முன்வைத்துள்ளது. குறிப்பாக டிசம்பர் மற்றும் ஜனவரியில் காற்றழுத்த தாழ்வு பிரதேசம் காற்றழுத்த மையமாகவோ, சூறாவளியாகவோ வலுப்பெறக் கூடிய நிலைமை காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அவ்வாறான நிலைமை ஏற்பட்ட தற்போதுள்ள காலநிலையில் மாற்றங்கள் ஏற்படும். அவை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தொடர்ந்தும் மக்களை தெளிவுபடுத்தும் என்றார்.

