ரசிகர்களையும், திரை மற்றும் விளையாட்டு துறை உள்ளிட்ட அனைத்து துறை பிரபலங்களையும் ஒன்றிணைக்கும் ‘ஃபேன்லி’ எனும் பிரத்யேக செயலியின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி இந்த செயலியை தொடங்கி வைத்தார்.
ரசிகர்கள் தங்களின் ஆதர்ஷ நட்சத்திரத்துடன் பங்கு பற்றி .. அவர்களின் தனித்துவமான தகவல்களை தெரிந்து கொள்வதுடன் அவர்களுடன் நேர் நிலையான எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஃபேன்லி எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரசிகர்கள் – திரை நட்சத்திரங்கள் மட்டும் அல்லாமல் விளையாட்டு துறை சார்ந்த நட்சத்திரங்களுடன் தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்திருக்கிறது.
பொதுவாகவே இன்றைய டிஜிட்டல் உலகில் பிரபலங்களை பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் வேகமாக பரவுகிறது. இதனால் ரசிகர்களும் நட்சத்திரங்களும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு, தங்களின் எல்லைகளை வரையறுத்துக் கொள்கிறார்கள்.
இந்நிலையில் ரசிகர்களும், பிரபல நட்சத்திரங்களும் நேர் நிலையான எண்ணங்களுடன் ஒன்றிணைக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் ஃபேன்லி எனும் பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதனை சென்னையை தலைமையிடமாக கொண்டிருக்கும் ஃபேமிலி என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் வடிவமைத்திருக்கிறது. இந்த பிரத்யேக செயலியை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இறகுப்பந்து விளையாட்டின் சர்வதேச வீரர் கோபி சந்த், சதுரங்க விளையாட்டின் சர்வதேச வீரர் குகேஷ், முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் ஃபேன்லி செயலியை அறிமுகப்படுத்தி சிவகார்த்திகேயன் பேசுகையில், ” ஃபேன்லி என்பதை கேட்கும் போது ‘ஃபேமிலி’ என்று தான் கேட்கிறது. ரசிகர்களிடத்தில் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து, நேர் நிலையான விடயங்களை பரவச் செய்வதுதான் இதன் நோக்கம் என்பதை அறிந்து பாராட்டுகிறேன்.
எம்மை வணங்கும் ரசிகர்கள் வேண்டாம். எம்மை ரசிக்கும் ரசிகர்கள் தான் வேண்டும். அதனால் தான் நான் அவர்களை ‘சகோதர சகோதரிகளே..!’ என அழைக்கிறேன். அதேபோல் இந்த செயலியும் இதைப் போன்றே நேர் நிலையான விடயங்களை மட்டுமே தரும். இந்த செயலியின் நோக்கமும், ரசிகர்களின் பங்களிப்பும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இந்த செயலி குறித்து நண்பரும், இது தொடர்பாக நிறைய விடயங்களை தெரிந்து வைத்திருக்கும் இசையமைப்பாளருமான அனிருத்தை இதில் பங்குபற்றுமாறு அவரிடம் கேட்டுக்கொள்வேன்” என்றார்.

