‘ஜோ’, ‘ஆண்பாவம் பொல்லாதது’ என இரண்டு வணிக ரீதியான வெற்றி படங்களை அளித்த நடிகர் ரியோ ராஜ் – இயக்குநரும், நடிகருமான மிஷ்கினின் வேண்டுகோளை ஏற்று தனது பெயரை ரியோ என மாற்றி அமைத்துக் கொண்டு கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘ராம் இன் லீலா’ என பெயரிடப்பட்டு, அதற்கான போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் தயாராகும் ‘ராம் இன் லீலா’ எனும் திரைப்படத்தில் ரியோ, வர்திகா, மா. கா. பா. ஆனந்த், சேத்தன், முனிஸ்காந்த், மாளவிகா அவினாஷ், தீபா வெங்கட், சுப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மல்லிகார்ஜுன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அங்கித் மேனன் இசையமைக்கிறார். ஃபேண்டஸியான ரொமான்டிக் கொமடி ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் எவ்யா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். ரவீந்திரன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” காதலை சம காலத்து இளைய தலைமுறையினரை வசீகரிக்கும் வகையில் ஃபேண்டஸியான புதிய உலகில் காதல் – காதலர்கள்- அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் – சவால்கள் ஆகியவற்றை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

