பிரபல எழுத்தாளரான ராஜேஷ் குமார் எழுதிய க்ரைம் நாவல் ஒன்றினை தழுவி தயாராகி இருக்கும் ‘ரேகை’ எனும் கிரைம் திரில்லரான இணைய தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.
எழுத்தாளர் எம். தினகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரேகை’ எனும் இணைய தொடரில் பாலஹாசன், பவித்ரா ஜனனி, போபலன், பிரகதேஷ், வினோதினி வைத்தியநாதன், ஸ்ரீ ராம் ,அஞ்சலி ராவ், இந்திரஜித் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
குற்ற சம்பவம் தொடர்பான தடயவியல் புலனாய்வு விசாரணையை மையப்படுத்திய இந்த இணைய தொடரை எஸ் எஸ் குரூப் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். சிங்காரவேலன் தயாரித்திருக்கிறார்.
ஏழு அத்தியாயங்களை கொண்ட இந்த க்ரைம் திரில்லர் ஜேனரிலான அசல் இணையத் தொடர் ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் ஒளிபரப்பாகிறது.
இந்த இணைய தொடர் குறித்து இயக்குநர் பேசுகையில், ” எம்முடைய கண்ணுக்குத் தெரியாமல் நடக்கும் ஒரு வன்முறையை இந்த இணையத்தொடர் விவரிக்கிறது. காவல் நிலையத்தில் புகாராக கூட பதிவாகாத அந்த வன்முறையால் பாதிக்கப்படும் குடும்பங்களை பற்றிய உணர்வுபூர்வமான பின்னணியை விவரிக்கிறது.
இந்த இணையத் தொடருக்கான கதை கரு எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் நாவலில் இருந்து எடுத்தாளப்பட்டாலும்.. பார்வையாளர்கள் அனைவருக்கும் நெருக்கமாக இருக்கும் வகையில் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

