பாடசாலைக் கல்வியின் பின்னர் தொழிற்கல்வியில் இணைவதற்கான தகவல்களைப் பெறுவதற்கான அவசர தொடர்பாடல் சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து தொழிற்கல்வியில் சேர மாணவர்களுக்குத் தேவையான தகவல்களைத் துல்லியமாகவும் திறமையாகவும் வழங்கும் நோக்கில், ‘1966’ தொழிற்கல்வி அவசர தொலைபேசி சேவை, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நாரஹேன்பிட்டவில் அமைந்துள்ள ‘நிபுணதா பியச’ வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
மூன்று மொழிகளிலும் சேவை
‘1966’ தொலைபேசி சேவையின் மூலம், தொழிற்கல்வி தொடர்பான எந்தவொரு தகவலையும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் திறமையான சேவைக்காக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் தொழிற்கல்வி அமைச்சின் தொழில்நுட்ப அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட ‘AI Chat BOT’ ஐ அணுக முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தொழிற்கல்வி தொடர்பான எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். புதிய பாடப்பிரிவின் கீழ் முதன்மையாகக் கற்பிக்கப்படும் தொழிற்கல்வியுடன் நவீன தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை இதன்போது பிரதமர் விளக்கினார்.
நாளைய தொழில் உலகத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ளத் தேவையான மனித மற்றும் பௌதீக வளங்களை, மாற்றப்பட வேண்டிய பகுதிகளை மாற்றுவதன் மூலம், தயக்கமின்றி, தொழிற்கல்வி கட்டமைப்பிற்குள் தரமான முறையில் மேம்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

