அண்மையில் ஈழத்தின் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 25ஆவது ஆண்டு நினைவேந்தல் கனடாவில் இடம்பெற்றது. அதில் பலரும் கலந்துகொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். நிகழ்வை அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி ஏற்பாடு செய்திருந்தார்.
மயில்வாகனம் நிமலராஜன் யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கிய முன்னணி ஊடகவியலாளர் ஆவார்.2000 அக்டோபர் 19 அன்று, இவர் இலங்கை இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் ஆயுததாரி ஒருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
போர் சூழல் நிலவிய காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து நிமலராஜன் பல செய்தி நிறுவனங்களுக்கு செய்திகளை வழங்கி வந்தார். அவற்றுள் பிபிசியின் தமிழ், சிங்கள சேவைகளும், வீரகேசரி நாளேடு, ராவய நாளேடு என்பன முக்கியமானவையாகும். இவர் நடுநிலையான செய்திகளை வழங்கிய ஒரு ஊடகவியலாளர் ஆவார்.
19.10.2000 அன்று இரவு கொலையாளிகள் அவரது வீட்டினுள் புகுந்து நிமலராஜனின் தந்தையாரின் பின் கழுத்தில் கத்தியை வைத்து அமிழ்த்த இன்னோருவர் நிமலராஜனின் அறைக்குள் சென்று துப்பாக்கியால் சுட்டனர். நிமலராஜன் தான் எழுதிக் கொண்டிருந்த கட்டுரை மேலேயே தனது உயிரை விட்டார். கொலையாளிகள் வீட்டினுள் கைகுண்டு ஒன்றை வீசி விட்டு சென்றனர். இத்தாக்குதல் யாழ்ப்பாண நகர மத்தியில் அதியுயர் பாதுகாப்பு வலயத்துள் இராணுவ ஊரடங்கு சட்டம் இயங்கும் வேலையில் நடைபெற்றது. இப்படியாக இடம்பெற்ற நிமலின் கொலை பெரும் அதிர்ச்சியை இன்றும் எம் மனதில் உண்டு பண்ணுகிறது.
நிமலரஜானின் படுகொலைக்கு நீதி வேண்டும். அவரைப் போல பல ஊடகவியலாளர்கள் எங்கள் மண்ணில் கொல்லப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். நிமலராஜனுக்கான நீதி தமிழ் ஊடகத்துறைக்கான நீதி.
ஊடகப் போராளி கிருபா பிள்ளை

