‘அங்கமாலீ டைரீஸ்’ படத்தின் மூலம் மலையாள ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பான் இந்திய ரசிகர்களுக்கும் அறிமுகமாகி பிரபலமான நடிகர் அண்டனி வர்கீஸ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘காட்டாளன்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் பால் ஜோர்ஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காட்டாளன்’ எனும் திரைப்படத்தில் அண்டனி வர்கீஸ், சுனில் , கபீர் துஹான் சிங், றாப்பர் பேபி ஜீன், ராஜு திரண்டாசு, பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக் , ஹனான் ஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரெனாடிவ் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு பி. அஜனீஸ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். அதிரடி எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை கியூப்ஸ் என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஷெரீப் முகமது தயாரிக்கிறார்.
இதனிடையே நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியாகி, பான் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்த ‘மார்கோ’ திரைப்படத்தை தொடர்ந்து… தயாரிப்பாளர் ஷெரீப் முகமது தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக ‘காட்டாளன் ‘ திரைப்படத்தை உருவாக்கி வருகிறார் என்பதும், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நாயகனின் இறுக்கமான மற்றும் மிரட்டலான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.