தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 38ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கடைசி அம்சமான மெய்வல்லுநர் போட்டிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவி ஒருவரும் மாணவன் ஒருவரும் உயரம் பாய்தலில் சாதனைகள் படைத்து தங்கப் பதக்கங்களை சுவீகரித்து அசத்தியுள்ளனர்.
14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான உயரம் பாய்தல் போட்டியில் 1.56 மீற்றர் உயரத்தைத் தாவிய மன்னார் பற்றிமா மத்திய மகா வித்தியாலய மாணவி டபிள்யூ. வில்ஷியா புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான உயரம் பாய்தலில் 1.98 மீற்றர் உயரத்தைத் தாவிய மட்டக்களப்பு பண்டத்தரிப்பு களுதாவளை மகா வித்தியாலாய மாணவன் கே. பகிர்ஜன் புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
பகிர்ஜனின் ஆற்றல் வெளிப்பாடு பிரமிக்கத்தக்கதாக அமைந்துள்ளது என மெயல்வல்லுநர்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான தட்டெறிதல் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் கே. கிருஷான் 50.39 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண பாடசாலைகள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து ஏனைய பாடசாலைகளை பிரமிக்கவைத்தன.
இப் போட்டியில் அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவி பி. சண்முகப்பிரியா, விக்டோரியா கல்லூரி மாணவி கே. வைஷ்ணவி, ஸ்கந்தவரோதயா கல்லூரி மாணவி எஸ். சகானா ஆகியோர் 2.60 மீற்றர் உயரத்தை தாவி முயற்சிகளின் அடிப்படையில் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.



18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் முருங்கன் மகா வித்தியாலய மாணவன் ஏ.கெமில்டன் (6.91 மீற்றர்) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி ஆயிலிலாய் (10.04 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா காமினி மகா வித்தியாலய மாணவன் ஈ. விகிர்தன் (3:59.20) வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றி பாய்தலில் 4.50 மீற்றர் உயரத்தைத் தாவிய தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவன் சந்திரகுமார் துஷாந்தன் முதலாம் இடத்தையும் சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவன் கஜானன் அதே உயரத்தைத் தாவி இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

எனினும் இப் போட்டியில் முன்றாம் இடத்தைப் பெற்ற மேல் மாகாண பாடசாலை மாணவனின் அவயவத்தில் பச்சைக் குத்திப்பட்டிருந்ததாகவும் இது பாடசாலை மாணவர்களுக்கான ஒழுக்க விதிகளை மீறுவதாகவும் தெரிவித்து அவரை தகுதிநீக்கம் செய்யுமாறு தெல்லிப்பழை மகாஜனா, சாவகச்சேரி இந்து, ஸ்கந்தவரோதயா ஆகிய கல்லூரிகளின் அதிகாரிகள் எழுத்துமூல ஆட்சேபனை செய்ததால் அப் போட்டிக்கான முடிவு தீர்ப்பாளர்களால் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஆட்சேபனை மனுவை பரீசீலித்த கல்வி அமைச்சு அதிகாரிகள், குறிப்பிட்ட மாணவனை சோதனையிட்ட போது அவரது கையில் பச்சைக் குத்தப்பட்டிருப்பது ஊர்ஜிதமானதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை பணிப்பாளர் லூத்தினன் கேனல் அனுர அபேவிக்ரமவிடம் வினவியபோது, இந்த ஆட்சேபனையை எதிர்த்து சம்பந்தப்பட்ட மாணவனின் தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மேன்முறையீட்டு குழுவினர் வழங்கும் தீர்ப்பின் பின்னரே போட்டி முடிவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் பதிலளித்தார்.
கிழக்கு மாகாண வெற்றியாளர்கள்
14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான நீளம் பாய்தலில் ஒலுவில் அல் ஹம்ரா மகா வித்தியாலய மாணவன் யூ. அப்துல்லா (5.99 மீ.) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் மூதூர் அல் ஹம்ரா மாணவன் ஆர்.எம். அஹ்சான் (40.88 மீ.) 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் கந்தளாய் அல் தாரிஹ் மகா வித்தியலாய மாணவன் எம்.பி.எம். அஸாம் (10.85 செக்.) ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றெடுத்தனர்.
