தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவேன் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ள விடயமானது இலங்கையில் அமைதியும் விடுதலையும் திரும்பும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்ற ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பின்னர் ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான விஜயத்தை மேற் கொண்டிருந்த வேளையில் தமிழர்களின் விடயம் தொடர்பில் அவர் கூறிய கருத்துக்கள் இலங்கையின் வரலாற்றில் முக்கியமானது.
தமிழ் மக்கள் நீண்ட காலம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது வட மாகாணத்தில் தேவைக்கு அதிகமாக உள்ள இராணுவத்தைக் குறைக்கப் போவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அத்துடன் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவேன் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். அப்படிச் செய்வாராயின் இலங்கை வரலாற்றில் அனுராவின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.
அப்படி நடந்தால் உலகத் தமிழர்களின் ஆதரவும் அவருக்குக் கிடைக்கும். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வை முன்வைத்து, தமிழர் தாயகத்தில் இராணுவ மயத்தை நீக்கும் அனுரவின் செயல் நடந்தேறுமாக இருந்தால் அவரே வரலாற்று சிறப்பு மிக்க இலங்கை ஜனாதிபதியாக வரலாற்றில் இடம்பிடிப்பார்.
எமது தலைமைகள் தடம்மாறி, தன்னல அரசியலுக்காக அடிபடுகின்றனர். தாயகத்தில் மக்கள் தொடர்ந்தும் இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றனர். அனுராவின் செயல்களால் வரலாறு புதிய வடிவம் எடுக்கட்டும்.
ஊடகப் போராளி கிருபா பிள்ளை