நாட்டின் கலாசாரத்தை சீரழித்து, தரத்தை தாழ்த்திக் கொண்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை. எந்த வகையிலும் தன்பாலீர்ப்பின சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்கு வரவழைப்பதை மேம்படுத்த அரசாங்கத்தால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது. அது அரசாங்கத்தின் கொள்கையும் அல்ல என வெளிவிவகார, வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
சர்வதேச சுற்றுலா தலைமைத்துவ மாநாடு வியாழக்கிழமை (02) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார். நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
எமது பொருளாதார இலக்கை அடைவதற்கு சுற்றுலாத்துறையின் ஊடாக பாரிய ஒத்துழைப்புக்கள் கிடைக்கின்றன. இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில் சுற்றுலாத்துறை வருமானம் 2.2 பில்லியனை கடந்துள்ளது.
அதேவேளை சுற்றுலாப்பயணிகளின் வருகையும் பாரியளவில் அதிகரித்துள்ளது. செப்டெம்பரில் வரலாற்றில் முதன் முறையாக செப்டெம்பரில் அதிகூடிய சுற்றுலாப்பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது.
அதற்கமைய 158 971 சுற்றுலாப்பயணிகள் செப்டெம்பரில் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இவ்வாண்டில் 17 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்திருக்கின்றனர். எமது இலக்கை நோக்கி இந்த பயணத்தை தொடர்வோம்.
இலங்கையின் சுற்றுலாத்துறையின் தரத்தை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கின்றோம். இந்தியா, பிரத்தானியா, சீனா, ரஷ்யா, ஜேர்மன், பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் மேலும் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர்.
சுற்றுலாத்துறை மிக விரைவாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதற்கமைய எமது வருமானமும் அதிகரித்துச் செல்கிறது. இவ்வாறான சூழலில் எமது கலாசாரம் பாதுகாக்கப்படும் வகையில் சுற்றுலாத்துறை அபிவிருத்திகள் இடம்பெற வேண்டும்.
எமது தரத்தை தாழ்த்திக் கொண்டு, நாட்டின் கலாசாரத்தை சீரழித்து சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை.
எனவே எந்த வகையிலும் தன்பாலீர்ப்பின சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்கு வரவழைப்பதை மேம்படுத்த அரசாங்கத்தால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது. அது எமது கொள்கையும் அல்ல.
அரசாங்கத்திடம் அவ்வாறானதொரு கொள்கை இல்லை. இவ்வாறு விசாலமான எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வரும் நிலையில், இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான எந்தவொரு தேவையும் அரசாங்கத்துக்கு கிடையாது.
தன்பாலீர்ப்பினத்தவர்களை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான கொள்கையில் அரசாங்கம் இல்லை என்பதை தெளிவாகக் கூறிக் கொள்கின்றோம். சுற்றுலாத்துறையின் மதிப்பு மிக்க தரத்தைப் பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்வோம் என்றார்.