மன்னார் தீவில் மின் உற்பத்திக்கான காற்றாலைகளை நிறுவும் திட்டம் தொடர்பாக மூண்டிருக்கும் குழப்பநிலைக்கு படைபலத்தை பயன்படுத்தாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதில் நாட்டம் காட்டுமாறு அரசாங்கத்திடம் தேசிய சமாதானப் பேரவை வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
இது தொடர்பாக பேரவை வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது ;
மன்னார் தீவில் மின்சார உற்பத்திக்கான காற்றாலைகளை நிறுவுவது தொடர்பாக நீண்ட நாட்களாக நிலவிவரும் சர்ச்சை மக்களின் ஆர்ப்பாட்டங்களையும் ஹர்த்தால் போராட்டத்தையும் அடுத்து மேலும் தீவிரமடைந்திருக்கிறது.
காற்றாலைகளை நிறுவுவதற்கான உத்தேச இடத்திற்கு வாகனங்களில் இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுவதை தடுப்பதற்கு வீதியின் நடுவில் அமர்ந்திருந்த கத்தோலிக்க மதகுருமார்கள் மற்றும் பெண்கள் உட்பட மக்களை பொலிசார் பலவந்தமாக அப்புறப்படுத்தியதை தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் இந்த நிலைவரம் குறித்து தேசிய சமாதானப் பேரவை அதன் கவலையை வெளிப்படுத்துகிறது.
பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை பிரச்சினையில் சம்பந்தப்பட்ட தரப்புகளிடையில் முரண்பாடுகள் மேலும் அதிகரிப்பதற்கு வழிவகுத்திருக்கிறது.
அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை போராட்டக்காரர்கள் நம்பிக்கையை தகர்த்த ஒரு செயலாக நோக்குகிறார்கள். மக்கள் எதிர்க்கும் எந்த திட்டத்தையும் முன்னெடுக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தேர்தல் பிரசாரங்களின்போது மக்களுக்கு உறுதியளித்தார். குறிப்பாக, இந்தியாவின் அதானி குழுமம் நிறுவுவதற்கு திட்டமிட்டிருந்த காற்றாலைகள் குறித்தே இந்த வாக்குறுதியை அவர் வழங்கினார்.
நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80வது வருடாந்த கூட்டத் தொடரில் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்த வேளையில் மன்னாரில் பொலிஸார் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டது கவலைக்குரியது. நாடு திரும்பிய ஜனாதிபதி திசநாயக்க இந்த பிரச்சினையில் தலையிட்டு, முன்னர் உறுதியளித்ததன் பிரகாரம் பேச்சுவார்த்தையின் ஊடாக பரஸ்பரம் ஏற்புடைய தீர்வொனறைக் காண்பதில் நாட்டம் காட்ட வேண்டும்.
உள்நாட்டுக் கம்பனி ஒன்று உத்தேசிக்கும் தற்போதைய திட்டம் அதானி குழுமத்தினால் உத்தேசிக்கப்பட்ட நேரடி வெளிநாட்டு முதலீட்டு திட்டத்தின் ஒரு தொடர்ச்சியாகும். ஆனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான அக்கறைகள் மாறிவிடவில்லை.
கடல் மட்டத்திற்கு வெகுவாக கீழே இருக்கும் மன்னார் தீவொன்றில் நீர்நிலைகள் உப்பு படிவுகள் ஏற்படுதல், வெள்ள அபாயம் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு சேதம் தொடர்பில் மக்கள் கவலை கொண்டிருக்கிறார்கள். அவுஸ்திரேலிய கம்பனி ஒன்றினால் முன்னெடுக்கப்படவிருப்பதாக கூறப்படும் கனிம மண் அகழ்வு திட்டம் தொடர்பிலும் இதே போன்ற அக்கறை அச்சங்கள் வெளியிடப்பட்டன.
மின்சார ஆற்றலை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தையும் சர்வதேச கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு வெளிநாட்டு செலாவணியை சம்பாதிப்பதில் அதற்கு இருக்கும் அக்கறையையும் தேசிய சமாதானப் பேரவை புரிந்துகொள்கிறது. ஆனால், முன்னாள் போர் வலயமான மன்னாரில் மக்களின் இன, மத உணர்வுகள் மதிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
சட்டம், ஒழுங்கை பேணவேண்டியது பொலிசாரின் கடமை. ஆனால், அமைதிவழியில் எதிர்ப்பை வெளிப்படுத்தியவர்களுக்கு எதிராக பலாத்காரத்தைப் பயன்படுத்துவது பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தக்கூடிய ஆபத்தைக் கொண்டிருக்கிறது. பதற்றநிலையை தணிக்கக்கூடியதாகவும் நேர்மையான வழிகாட்டலை வழங்கக்கூடியதாகவும் பொலிசாரின் எதிர்கால நடவடிக்கைகள் அமையவேண்டும். தபால் ஊழியர்கள் மற்றும் மினசாரசபை ஊழியர்கள் போன்ற வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுக்கின்ற குழுக்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வுகளை எட்டியிருக்கிறது. அதேபோன்ற அணுகுமுறை மன்னாரிலும் பிரயோகிக்கப்பட வேண்டும்.